3348.'அரை கடை இட்ட
     முக்கோடி ஆயுவும்
புரை தபு தவத்தின் யான்
     படைத்த போதுமே,
நிரை வளை முன் கை இந்
     நின்ற நங்கையின்
கரை அறு நல் நலக் கடற்கு?'
     என்று உன்னினான்.

    நிரை வளை முன்கை - வரிசையாக வளையல்கள் அணிந்த
முன் கையுடன்; இந்நின்ற நங்கையின் - இங்கு நின்ற பெண்களிற்
சிறந்தவளின்; கரை அறு நல்நலக் கடற்கு - எல்லை அற்ற சிறந்த
அழகான கடலில் படிந்து களிப்பதற்கு; புரைதபு தவத்தின் யான்
படைத்த -
குறையற்ற தவத்தினால் நான் அடைந்த; அரை கடை
இட்ட முக்கோடி ஆயுவும் -
அரைக் கோடியைப் பின் சேர்ந்த என்
மூன்று கோடி ஆயுட் காலமும் (மூன்றரைக் கோடி ஆண்டுக் காலம்);
போதுமே - போதுமானது ஆகுமோ (ஆகாது); என்று உன்னினான்-
என்று இராவணன் எண்ணலானான்.

     நல் நலம் - மிக்க அழகு. கார்முகப் படலத்தில் 'நல் நலத்துப்
பெண் அரசி தோன்றினாள்' (682) என வந்ததும் காண்க. சீதையின்
அழகின் எல்லையைக் காண முடியாது என்பது 'உமையாள் ஒக்கும்
மங்கையர் உச்சிக்கரம் வைக்கும் சுமையாள் மேனி கண்டனர் 'காட்சிக்
கரை காணார் என (504) முன்னும் வந்துளது.

     இராவணன் சிவபிரானிடம் வேண்டி மூன்றரைக் கோடி
ஆண்டுகளை வாழ் நாளாகப் பெற்றான். அதனைத் திருமால் சூழ்ச்சி
செய்து அரைக் கோடி ஆக்கிவிட்டார் என்பது புராண மரபு. தன்
ஆயுள் போதாது என்ற கூற்றுப் பின்வரும் தீங்குக்கு அறிகுறியாக
அமங்கலப் பொருள் தருவதாம்.                                30