3349. | 'தேவரும், அவுணரும், தேவிமாரொடும் கூவல்செய் தொழிலினர், குடிமை செய்திட, மூஉலகமும் இவர் முறையின் ஆள, யான் ஏவல் செய்து உய்குவென், இனி' என்று உன்னினான். |
தேவரும் அவுணரும் தேவிமாரொடும் - விண்ணவரும் அசுரர்களும் தத்தம் மனைவியர்களுடன்; கூவல் செய் தொழிலினர்- நான் கூப்பிட்டவுடன் இட்ட கட்டளைகளைச் செய்யும் தொழில் உடையவர்களாய்; குடிமை செய்திட - வழிவழியாக அடிமை வேலை செய்துவர; மூஉலகமும் இவர் முறையின் ஆள - மூன்று உலகங்களையும் இப்பெண் உரிமை பெற்று ஆண்டு வர; இனியான் ஏவல் செய்து உய்குவென் என்று உன்னினான் - நான் இவர் இட்ட பணிகளைச் செய்து ஈடேறுவேன் என்று இராவணன் கருதினான். கூவல் - கூவி அழைத்துக் குற்றேவல் செய்யப் பணித்தல்; குற்றேவலுமாம். குடிமை - வழிவழியாக அடிமை. இராவணன் முன்னர்ப் பெற்ற வாழ்வு தேவரும் அசுரரும் வழிவழியாக அடிமையாக அவன் இட்ட பணியைச் செய்து உய்யும்படி அமைந்த மேனிலைச் சிறப்புடையது. இப்போது அத்தகைய வாழ்வின் உரிமையைச் சீதைக்கு நல்கி அவளிட்ட ஏவற் பணியைத் தான் செய்து உய்ய வேண்டும் என எண்ணுகிறான். 31 |