3350.'உளைவுறு துயர் முகத்து ஒளி
     இது ஆம் எனின்,
முளை எயிறு இலங்கிடும்
     முறுவல் என்படும்?
தளை அவிழ் குழல் இவட்
     கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பென், என் அரசு'
     என்று எண்ணினான்.

    உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின் - வேதனை
மிக்க துன்பப்படும் போதுகூட இவள் பொலிவு இத்தகைய
சிறப்புடையது என்றால்; முளை எயிறு இலங்கிடும் முறுவல்
என்படும் -
நாணற் குருத்துப் போன்று ஒளி வீசும் புன்னகை
செய்யும் போது அழகு எப்படிப் பட்டதாகும்?; தளை அவிழ் குழல்
இவள் கண்டு தந்த என்இளையவட்கு -
கட்டவிழ்ந்த கூந்தலை
உடைய இப் பெண்ணைப் பார்த்து எனக்களித்த என் தங்கை
சூர்ப்பணகைக்கு; என் அரசு அளிப்பென் என்று எண்ணினான் -
என்னுடைய அரசுரிமையைப் பரிசாகக் கொடுப்பேன் என்று
இராவணன் கருதினான்.

     உளைவுறு துயர் - இராமனைப் பிரிந்து பின் அவற்கு ஏற்பட்ட
கேட்டை எண்ணி வேதனைப்படும் சீதையின் துன்பம் முன்னர்த்
'தூங்கல் இல் குயில் கெழு சொல்லின் உம்பரும் ஓங்கிய அழகினாள்'
என இராவணன் உன்னியதைக் கண்டோம் (3345). முளை எயிறு -
நாணற் குருத்துப் போன்ற பற்கள். 'முளையிள வெண்பன் முதுக் குறை
நங்கை' எனவும் (சிலம்பு 15. 202). 'முளைஎயிறரும்பி' எனவும்
(மணிகேலை 4.100) முளையெயிற்றிவளை (சீவக. 2042) எனவும்
முன்னை நூல்கள் இதைக் குறித்தன.

     'தளையவிழ் கூந்தல்' என்பதைச் சீதைக்கு ஆக்கும் போது
அன்மொழித் தொகையாம். தந்த என்பது சூர்ப்பணகை சீதையைக்
கண்ட போதே அவளைத் தனக்கென அளித்து விட்டதாக இராவணன்
துணிகிறான். இது காலவழுவமைதி.                               32