3351. | ஆண்டையான் அனையன உன்னி, ஆசை மேல் மூண்டு எழு சிந்தனை, முறை இலோன்தனைக் காண்டலும், கண்ணின் நீர் துடைத்த கற்பினாள், 'ஈண்டு எழுந்தருளும்' என்று, இனிய கூறினாள். |
ஆண்டையான் அனையன உன்னி - அவ்விடத்தோனாகிய இராவணன் மேற்கூறியவற்றை நினைந்து; ஆசை மேல் மூண்டு எழு சிந்தனை - ஆசை மேலும் மேலும் பொங்குகின்ற எண்ணமுடைய; முறை இலோன் தனைக் காண்டலும் - அறமுறையில்லோனாகிய இராவணனைப் பார்த்தவுடன்; கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் - கண்களில் வடியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட கற்புடைய சீதை; 'ஈண்டு எழுந்தருளும்' என்று இனிய கூறினாள் - 'இங்கு எழுந்தருள் வீராக' என இனிய மொழிகள் கூறி வரவேற்றாள். இராவணனின் எண்ணத்தில் மேலும் மேலும் ஆசை எழுந்ததால் முறையான அறநெறியிலிருந்து பிறழ்ந்து பிறனில் விழையும் பேதை நெறிப்படுகின்றான். அறன் கடை நின்றாருளெல்லாம் பிறன் கடை நின்றாரிற் பேதை யாரில்' என்பார் திருவள்ளுவர் (142). இராமனின் 'அபயக்குரல்' கேட்டு அவனுக்கு நேர்ந்த தீங்கை எண்ணிக் கண்ணீர் வடித்தாள்; அந்நிலையிலும் விருந்தினராகத் தவ வடிவில் வந்த முனிவரைக் கண்டதும் தன் துன்பத்தை மாற்றினாள். இனிய மொழி கூறி வரவேற்றாள். இது சீதையின் இல்லறம் ஒம்பும் சிறப்பைக் காட்டும். கற்பினாள் என்றதால் எந்நிலையிலும் சீதை கற்பு நெறியிலிருந்து பிறழாள் என்பதை வலியுறுத்தும். இராவணனுடன் போரிட்டுச் சிறையிழந்த சடாயுவின் எண்ணத்தில் 'பொருஞ் சிறையற்றதே பூவை கற்பெனும் இருஞ்சிறை அறாது என இடரின் நீங்கினான்' (3453) என வெளிப்படுத்தலால் அறியலாம். இராவணனின் முறை இலா நெறியும் சீதையின் இல்லறக் கற்பு நெறியும் முரணிலையில் மாந்தர் நிலையை உணர்த்துகின்றன. 33 |