இராவணன் இருத்தலும் இயற்கை நடுங்கலும் 3352. | ஏத்தினள்; எய்தலும், 'இருத்திர் ஈண்டு' என, வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள்; மாத் திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும், பூத் தொடர் சாலையின் இருந்த போழ்தினே, |
ஏத்தினள் - வரவேற்றவளாம் சீதை; எய்தலும் - இராவண சன்னியாசி அப்பன்ன சாலையை அடையவும்; 'ஈண்டு இருத்திர்' என வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள் - 'இங்கு அமர்வீராக' என்று கூறிப் பிரம்பு இருக்கையை முறைப்படி அளித்தாள்; மாத் திரி தண்டு அயல் வைத்த வஞ்சனும் - பெருமைக்குரிய முக்கோலை அருகே வைத்த வஞ்சகனாம் இராவணனும்; பூத்தொடர் சாலையின் இருந்த போழ்தினே - பூக்கள் படர்ந்து அழகுடன் விளங்கிய அப்பன்ன சாலையில் அமர்ந்த போதிலே, வேத்திரம் - மூங்கில். விதிப்படி இருக்கை அளித்ததால் அதைத் தொடர்ந்து நீரளித்து வரவேற்றல் (அர்க்கியம்), காலலம்ப நீர் அளித்தல் (பாத்தியம்), வலக் குடங்கையால் மந்திர பூர்வமாக நீரை உட் கொள்ளல் (ஆசம நீயம்) ஆகிய செயல்களைச் செய்தனள் என்பது பெறப்படும். இவ்வாறு கொள்வதை 'உபலட்சணம்' என்பர். 34 |