3353. | நடுங்கின, மலைகளும் மரனும்; நா அவிந்து அடங்கின, பறவையும்; விலங்கும் அஞ்சின; படம் குறைந்து ஒதுங்கின, பாம்பும்;-பாதகக் கடுந் தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே. |
பாதகக் கடுந்தொழில் அரக்கனைக் காணும் கண்ணின் - பெரிய பாவத்திற்குரிய கொடிய செயலைச் செய்ய வந்த அரக்கனாம் இராவணனை அங்குக் கண்ட போது; மலைகளும் மரனும் நடுங்கின- அங்கிருந்த மலைகளும் மரங்களும் நடுக்கம் கொண்டன; பறவையும் நா அவிந்து அடங்கின - பறவைகளும் கூவாமல் அடங்கி விட்டன; விலங்கும் அஞ்சின - கொடிய காட்டு மிருகங்களும் பயப்பட்டன; பாம்பும் படம் குறைந்து ஒதுங்கின - கொடிய பாம்புகளும் படமெடுப்பதை விட்டு அஞ்சி அடங்கின. ஏ - ஈற்றசை. பாதகக் கடுந்தொழில் - பிறர் மனை நயத்தலாகும். காணும் கண்ணின் - காணும்பொழுது எனப் பொருள் கொள்ளப்பட்டது. மலை, மரம், பறவை, விலங்கு, பாம்பு போன்றவை இராவணனைக் கண்டு அஞ்சின. அவன் செய்யப் போகும் செயல்களால் சீதைக்கும் இராவணனுக்கும் நடக்கப் போகும் தீங்குகளைக் குறிக்கும் அறிகுறி எனலுமாம். கொடிய பாம்பும் படமவிந்து அடங்கிய நிலை அதனினும் இராவணன் தீங்கு செய்ய வல்லவன் என்பதைக் குறிக்கும். 35 |