தீயவன் வினாவும், தூயவள் விடையும் 3354. | இருந்தவன், 'யாவது இவ் இருக்கை? இங்கு உறை அருந் தவன் யாவன்? நீர் யாரை?' என்றலும், 'விருந்தினர்; இவ் வழி விரகு இலார்' என, பெருந் தடங் கண்ணவள் பேசல் மேயினாள்: |
இருந்தவன் - (மூங்கிலிருக்கையில் இருந்த) இராவண சன்னியாசி; இவ் இருக்கை யாவது - இந்த இருப்பிடம் யாது?; இங்கு உறை அருந்தவன் யாவன் - இச்சாலையில் வாழும் அரிய முனிவன் யார்?; நீர் யாரை - நீவிர் யார்?; என்றலும் - எனக் கேட்டதும்; இவ்வழி விருந்தினர் - இங்கு வந்த புதியவர் ஆவர்; விரகு இலார்- வஞ்சகம் அற்றவர்; என(ப்) பெருந் தடங் கண்ணவள் பேசல் மேயினாள் - என்று நினைத்துப் பெரிய நீண்ட கண்களை உடைய சீதை (இராவணனுடன்) பேசத் தொடங்கினாள். விருந்தினர் - புதிதாக வந்த அதிதி ஆவர். விரகு - என்பதைக் கபடம் எனவும் இங்கு வழி அறியாதவர் எனவும் உரைப்பர். பாலகாண்ட நாட்டுப் படலத்தில் விருந்தோம்பும் மங்கையர் மாண்பு பற்றிக் கூறும்போது 'பெருந்தடங்கண் பிறை நுதலார்' (67) என்று கூறியதை நினைவு கூர்க. 'பேசல் மேயினாள்' முனிவன் என இராவணனை எண்ணியதால் புதிய ஆண்கள் முன் நாணித் தலை குனிந்து பேசுவது போலன்றி அவனை நோக்கிப் பேசத் தொடங்கினாள் சீதை. இருந்தவன் - இறந்த கால வினையாலணையும் பெயர். 36 |