3355. | 'தயரதன் தொல் குலத் தனையன்; தம்பியோடு, உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான், அயர்வுஇலன், இவ் வழி உறையும்; அன்னவன் பெயரினைத் தெரிகுதிர், பெருமையீர்!' என்றாள். |
பெருமையீர் - பெருமைக்குரியவரே!; தொல்குலத் தயரதன் தனையன் - பழைய இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த தயரத மன்னனின் மகன்; தம்பியோடு உயர்குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் - தம் தம்பியுடன் உயர்ந்த கேகய குலத்தில் பிறந்த தாயின் கட்டளையைத் தலை மேல் தாங்கியவராய்; அயர்விலன் - வருத்தம் இல்லாமல்; இவ்வழி உறையும் - இவ்விடத்தில் தங்கியிருக்கிறார்; அன்னவன் பெயரினைத் தெரிகுதிர் என்றாள் - அவரது பெயரை நீங்கள் அறிந்திருக்கலாமே என்று விடை கூறினாள். தயரதன் குலம் இட்சுவாகு குலம். அணி அரங்கம் தந்தானை 'அறியாதார் அறியாதார்' எனக் குலமுறை கிளத்து படலத்தில் குறிக்கப் பெற்றுளது (638) கைகேயியினை 'உயர் குலத்து அன்னை' என்றதால் சீதையும் இராமன் போல் கைகேயி பால் கொண்ட மதிப்புப் புலப்படும். 'அன்னை சொல் உச்சி ஏந்தியது' முன்னர்க் கைகேயி கூறிய மொழி கேட்டு 'இப்பணி தலைமேல் கொண்டேன்' (1604) என இராமன் கூறிய மொழிகளுடன் ஒத்தியைவன. இராமன் பெயரைத் தண்ட காரணியத்து முனிவர்கள் நன்கு அறிவர். ஆதலால் 'தெரிகுதிர்' என்றாள் சீதை கணவன் பெயரை மனைவி கூறா நிலையும் இதில் புலப்படும். 37 |