3356. | 'கேட்டனென், கண்டிலென்; கெழுவு கங்கை நீர் நாட்டிடை ஒருமுறை நண்ணினேன்; மலர் வாள் தடங் கண்ணி! நீர் யாவர் மா மகள், காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர்?' என்றான். |
கேட்டனென் - நீர் கூறிய செய்திகளை நான் முன்னரே கேள்விப்பட்டுள்ளேன்; கண்டிலென் - (ஆனால் அவரை) நேரில் பார்த்ததில்லை; கெழுவு கங்கை நீர் நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் - மிக்க நீர்ப் பெருக்குடைய கங்கை பாயும் மருத வள நாட்டிடத்து ஒரு தடவை போயிருந்தேன்; மலர் வாள்தடங் கண்ணி- தாமரை மலர் போன்றும் வாள் போலும் நீண்டகண்ணையுடையவளே!; நீர் யாவர் மா மகள் - நீவிர் யாருடையபெருமைக்குரிய மகள்?; காட்டிடை அரும்பகல் கழிக்கின்றீர்என்றான் - இக் கொடிய காட்டில் அரிய நாட்களைக் கழிக்கின்றீர்எனக் கேட்டான். ஒரு முறை நண்ணினேன் என்பது முன்னர் இராவணன் திக்கு விசயம் செய்த போது அயோத்தியை ஆண்ட அனரணியன் என்பானைப் போரில் வீழ்த்தி நிந்தித்த போது அவன் தன் வழி முறையில் பிறக்கின்றவனால் கொல்லப்படுமாறு சபித்த வரலாறு நினைக்கப் பெறும். சீதையை நோக்கி வாள் தடங் கண்ணி என விளிப்பது பெருந்தடங் கண்ணி பேசலுற்றாள் (3354) எனக் குறிக்கப் பெற்றதும் ஒப்பிடற்குரியது. அயோத்தி அரண்மனையில் எல்லா நலனும் துய்த்தவள் இந்தக் காட்டில் துன்பப்பட்டு, நாளைக் கழிப்பதற்காக வருந்துபவன் போல் தன் மனத்தைக் காட்டிச் சீதையின் பரிவைப் பெற இராவணன் முயலும் முயற்சி இதுவாம். 38 |