'எங்கிருந்து வருகிறீர்?' என்ற சீதைக்கு வேடதாரியின் கபட உரை

3358. அவ் வழி அனையன
     உரைத்த ஆயிழை,
'வெவ் வழி வருந்தினிர்,
     விளைந்த மூப்பினிர்,
இவ் வழி இரு வினை
     கடக்க எண்ணினிர்,
எவ் வழிநின்றும் இங்கு
     எய்தினீர்?' என்றாள்.

    அவ்வழி அனையன உரைத்த ஆயிழை - அப்போது
அவ்வாறு தன் வரலாற்றைக் கூறிய சீதை; விளைந்த மூப்பினிர் -
பழுத்த முதுமை அடைந்தவரே!; வெவ்வழி வருந்தினிர் - கொடிய
காட்டு வழியில் வந்ததால் துன்பமடைந்தீர்; இவ்வழி இருவினை
கடக்க எண்ணினிர் -
இத் தவ நெறியில் புண்ணிய பாவங்களைக்
கடந்து செல்ல நினைத்தீர்; எவ்வழி நின்றும் இங்கு எய்தினீர்
என்றாள் -
எவ்விடத்திலிருந்து இவ்விடம் வந்தடைந்தீர் எனக்
கேட்டாள்.

     ஆயிழை - ஆராய்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த
பெண்ணாம் சீதை. மூப்பின் முதிர்ச்சியைச் சுட்ட 'விளைந்த மூப்பினிர்'
என்றாள். இரு வினை என்பது 'இருள் சேர் இருவினை' எனக் குறள்
(குறள். 5) கூறும். 'வெவ்வழி வருந்தினிர்' என்ற கருத்துப்பட
முன்னரே 'சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்' (3339)
எனக் கூறப்பட்டுள்ளது.

     ஆயிழை - வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை.                                                   40