3359. | 'இந்திரற்கு இந்திரன்; எழுதல் ஆகலாச் சுந்தரன்; நான்முகன் மரபில் தோன்றினான்; அந்தரத்தோடும் எவ் உலகும் ஆள்கின்றான்; மந்திரத்து அரு மறை வைகும் நாவினான். |
(அடுத்த இராவணன்) இந்திரற்கு இந்திரன் - தேவர் தலைவனாம் இந்திரனுக்கே தலைவன்; எழுதல் ஆகலாச் சுந்தரன் - ஓவியத்தில் தீட்டற்கு அரிய அழகுடையவன்; நான்முகன் மரபில் தோன்றினான் - பிரமனின் குல வழியில் பிறந்தவன்; அந்தரத் தோடும் எவ் உலகும் ஆள்கின்றான் - வானில் உள்ள உலகத்தோடு எல்லா உலகங்களையும் ஆள்கின்றவன்; மந்திரத்து அருமறை வைகும் நாவினான் - மந்திரங்களைத் தம் இடமாகக் கொண்ட அரிய வேதங்கள் தங்கியுள்ள நாவை உடையவன்..... இந்திரன் - தலைவன். நரேந்திரன் என வருதல் காண்க. நான்முகன் மரபினன் என்பதை முன்னர்ச் சூர்ப்பணகையும் இராமனிடத்து 'பூவிலோன் புதல்வன் மைந்தன்' (2770) எனக் கூறினாள். 'அருமறை வைகும் நாவினன்' என்பதற்கேற்ப இராவணன் தவக் கோலத்துடன் வந்ததைக் கூறும் போது' வீணையின் இசைபட வேதம் பாடுவான். எனப்பட்டது (3339). சீதையின் கேள்விக்கு விடையாக இராவணன் பெருமை இது முதல் கூறப்பெறுகிறது. 41 |