3360. | 'ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை ஊசி-வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான்; ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் பூசல் செய் மருப்பினைப் பொடிசெய் தோளினான். |
ஈசன் இருந்த பேர் இலங்கு மால் வரை - சிவபிரான் எழுந்தருளியுள்ள பெரிதாக விளங்கும் மிகப் பெரிய கயிலை மலையை; ஆண்டு ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் - அக்காலத்தில் ஆணிவேருடன் அடியோடு பறித்து எடுக்கின்ற வலிமையுடையவன்; ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் - திசைகளைத் தாங்கும் பெருமையில் அளவில்லாத யானைகளின்; பூசல் செய் மருப்பினைப் பொடி செய் தோளினான் - போர் புரியும் கொம்புகளைப் பொடி செய்யும் வலிய தோள்களை உடையவன். ஊசிவேர் என்பதை நம்மாழ்வாரின் 'நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின்' என்ற அடிகளால் (திருவாய் மொழி 1.2.3) காண்க. இராவணன் கயிலை மலையெடுத்தமை இக்காப்பியத்தில் பல இடங்களில் வரும். 'மலையெடுத்த தனிமலையே' எனச் சூர்ப்பணகையின் ஓல மொழிகளில் (2832) அறியலாம். 'உருட்டும் ஊற்றத்தான்' என்ற பாடமுளது அது மிகைபட மொழிந்ததாம். திக்கு யானைகளின் கொம்பொடித்த செய்தியும் இந்நூலில் பல இடங்களில் கூறப்பெறும். 'திக்கின் மாவெலாம் தொலைத்து வெள்ளி மலை எடுத்து' என்ற சூர்ப்பணகை கூற்றில் (2770) அறியலாம். இதனால் இராவணன் பேராற்றல் விளங்கும். 42 |