3362. | 'பொன்னகரத்தினும், பொலன்கொள் நாகர்தம் தொல் நகரத்தினும், தொடர்ந்த மா நிலத்து எந் நகரத்தினும், இனிய; ஈண்டு, அவன் நல் நகரத்தன நவை இலாதன. |
பொன்னகரத்தினும் - பொன்மயமான தேவந்திரனின் நகரமாகிய அமராவதியைவிடவும்; பொலன் கொள் நாகர்தம் தொல் நகரத்தினும் - பொலிவு மிக்க நாகர்களுடைய பழைய நகரமாகிய போகவதியை விடவும்; தொடர்ந்த மாநிலத்து எந்நகரத்தினும் இனிய - (அவ்வுலகங்களால் மேலும் கீழுமாகத்) தொடரப்பட்ட இப்பூவுலகிலுள்ள எந்த நகரத்தை விடவும், இனிமையுடையது; ஈண்டு- இவ்வுலகில்; அவன் நல் நகரத்தன நவை இலாதன -அவனுடைய நல்ல இலங்கை நகரத்தில் உள்ளவை எவ்விதக் குற்றமும்இல்லாதன. பொன்னகரம் - அமராவதி - நாகர் நகரம் - போகவதி. மேலுலகம் கீழுலகம் நடுவிலுள்ள இவ்வுலகம் ஆகிய எவ்வுலகிலும் இல்லாத பெருமையும் பொலிவும் உடையது இலங்கையாம் இராவணனின் தலைநகரம். அதிலுள்ள பொருள்கள் மூவுலகிலுள்ள பொருள்களைக் காட்டிலும் இனியவை; குற்றமற்றவை. இவ்வாறு இராவணனின் பெருமை நகர் வாயிலாக விளக்கப் பெறும். 'உலகம் மூன்றில் தெட்புறு பொருள்கள் எல்லாம் இதனுழைச் செறிந்த' என்பார் பின்னரும் (4834). இனிய என்பதை அடையாகக் கொண்டு அழகிய எனவும் உரைப்பர். 44 |