3363. | 'தாளுடை மலருளான் தந்த, அந்தம் இல் நாளுடை வாழ்க்கையன்; நாரி பாகத்தன் வாளுடைத் தடக் கையன்; வாரி வைத்த வெங் கோளுடைச் சிறையினன்; குணங்கள் மேன்மையான். |
தாளுடை மலருளான் தந்த - நாளமுடைய தாமரை மலரில் வாழும் பிரமதேவன் கொடுத்த; அந்தம் இல் நாளுடை வாழ்க்கையன் - முடிவிலா ஆயுள் நாளுடன் கூடிய வாழ்வை உடையவன்; நாரி பாகத்தன் வாளுடைத் தடக்கையன் - உமையொரு பாகனாம் சிவன் அளித்த வாட்படையை ஏந்திய பெரிய கையையுடையவன்; வாரி வைத்த வெங் கோளுடைச் சிறையினன் - ஒருங்கு பிடித்து வைத்த கொடிய கிரகங்களைக் கொண்ட சிறைச் சாலையுடையவன்; குணங்கள் மேன்மையான் - எல்லாக் குணங்களாலும் மேன்மையுடையவன். பிற மலர்களைவிடத் தாமரையின் தண்டு உயர்ந்துள்ளமையால் 'தாளுடை மலர்' எனப்பட்டது. முன்னரும் 'தாள தாமரை மலர்' (526) எனப் புனையப்பட்டுள்ளது காண்க. இளமையில், அரிய தவம் செய்த இராவணன் அழியா வரத்தைப் பிரமனிடமிருந்து பெற்றான். அவன் கயிலை மலையைப் பெயர்த்தபோது சாமகீதம் பாடி இறைவனை மகிழ்வித்துச் சந்திரகாசம் என்ற வாளைப் பெற்றான். திக்கு விசயம் செய்த போது கதிர், மதியம் ஆகிய பல கோள்களைச் சிறை வைத்தான். வெம்மையைச் சிறைக்கும் கூட்டலாம். (நாரி பாகத்தன் - சிவபிரான்; நாரி : பெண்; இங்கே உமை). 45 |