3364. | 'வெம்மை தீர் ஒழுக்கினன்; விரிந்த கேள்வியன்; செம்மையோன்; மன்மதன் திகைக்கும் செவ்வியன்; எம்மையோர் அனைவரும், "இறைவர்" என்று எணும் மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான். |
வெம்மை தீர் ஒழுக்கினன் - கொடுமை தீர்ந்த நல்லொழுக்கம் உடையவன்; விரிந்த கேள்வியன் - பரந்த வேதங்களை உணர்ந்தவன்; செம்மையோன் - நடுநிலை உடையவன்; மன்மதன் திகைக்கும் செவ் வியன் - காமனே கண்டு ஏங்கும் அழகுடையவன்; எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் - எவ்வுலகில் உள்ள எல்லோரும் தெய்வம் எனக் கருதும்; மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான் - மூன்று முதல் தெய்வங்களின் பெருமைகளும் முழுதும் பெற்ற பெருமை உடையவன். கேள்வி - வேதம்; எழுதப்படாது ஓதியே உணரப்பெறும் நூல். சுருதி என்பதும் இப்பொருள் தருவதால் 'கற்றிலனாயினும் கேட்க' என்பதற்கேற்ப சான்றோரிடம் நூல்களைக் கேட்டுணர்ந்தவன் எனலுமாம். அழகின் கடவுள் மன்மதன் அவனே இராவணன் அழகைக் கண்டு திகைப்பான் எனில்; இராவணன் அழகு எல்லையற்றது என்பது குறிப்பு. மும்மையோர் திரிமூர்த்திகள் பிரமன், திருமால், சிவன். செம்மை - நற்பண்புமாம். செவ்வி - காளைப் பருவமுமாம். எம்மையோர் 'மை' விகுதி இடப்பொருளது. மும்மையோர் - மூவர் இதில் 'மை' பகுதிப் பொருள் விகுதி. 46 |