3365.'அனைத்து உலகினும் அழகு
     அமைந்த நங்கையர்
எனைப் பலர், அவன்தனது
     அருளின் இச்சையோர்;
நினைத்து, அவர் உருகவும்,
     உதவ நேர்கிலன்;
மனக்கு இனியாள் ஒரு
     மாதை நாடுவான்.

    அனைத்து உலகினும் - எல்லா உலகங்களிலுமுள்ள; அழகு
அமைந்த நங்கையர் எனைப்பலர் -
அழகுடைய பெண்களிற்
சிறந்தோர் மிகப் பலர்; அவன் தனது அருளின் இச்சையோர் -
அவனுடைய அருளைப் பெற விருப்பமுடையோர்; அவர் நினைத்து
உருகவும் உதவ நேர்கிலன் -
அப்பெண்கள் எண்ணி மனம்
உருகவும் அவர்க்கின்பம் கொடுக்க உடன்படாதவனாய்; மனக்கு
இனியாள் ஒரு மாதை நாடுவன் -
தன் உள்ளத்திற்கினியவளாம் ஒரு
மங்கையைத் தேடுகிறான்.

     நங்கையர் - பெண்களிற் சிறந்தார். அவருள்ளும் வடிவழகிற்
சிறந்தவர் என்பது தோன்ற அழகு அமைந்த நங்கையர் என்றார்.
எனைப் பலர் - எத்தனையோ பலர். மாதர் - என்பது காதல் எனும்
பொருள் கொண்ட உரிச் சொல், ஆகுபெயராய் விருப்பத்திற்குரிய
மகளிர் மேல் நின்றது.

     மனக்கு - மனத்துக்கு விகாரம். கைகேயி கூற்றிலும் 'மனக்கு
நல்லன சொல் வினை' என முன்னரும் (1471) வந்தது.                47