3366. | 'ஆண்டையான் அரசு வீற்றிருந்த அந் நகர், வேண்டி, யான் சில் பகல் உறைதல் மேவினேன்; நீண்டனென் இருந்து, அவற் பிரியும் நெஞ்சிலேன், மீண்டனென்' என்றனன், வினையம் உன்னுவான். |
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அந்நகர் வேண்டி - தலைவனாம் அவன் அரசாட்சி செய்து வரும் சிறப்புற்ற அந்நகரத்தை விரும்பி; யான் சில் பகல் உறைதல் மேவினேன் - நான் சில நாட்கள் தங்கியிருப்பதை விரும்பினேன்; நீண்டனென் இருந்து அவற்பிரியும் நெஞ்சிலேன் - நெடுங்காலம் அங்கிருந்தும் அவனை விட்டு நீங்குதற்கு மனமில்லாதவன் ஆனேன், (பின்); மீண்டனென் என்றனன் வினையம் உன்னுவான் - இங்கு வந்தேன் என்று கூறினான் (சீதையைக் கவரும்) சூழ்ச்சியைக் கருதுபவனாம் இராவணன். ஆண்டை - ஆண்தகை என்பதன் விகாரம். இன்றும் சோழ நாட்டில் ஆண்டை என்ற பெயர் வழக்கிலுள்ளது. அத்தன்மையான் ஆகிய அவன் என்பதும் ஒரு பொருள். 'முன்பு நான் வாழ்ந்தது தண்ட காரணியம். அங்கு உறையும் முனிவர்களைப் பிரிந்து இலங்கையுள் இராவணனுடன் சில காலம் வாழ்ந்தேன். மீண்டு தண்ட காரணிய முனிவர்களைக் காண வந்தேன்' என இராவணன் கொண்ட வேடத்திற்கேற்ப பொருள் கொள்ளவும் இடமுளது. வினையம் - வினை செய்வது பற்றி நன்கு சூழ்தல். சூழ்ச்சி 'எவ்வழி நின்றும் இங்கு எய்தினீர்' என்று சீதை கேட்ட கேள்விக்கு (3358) விடையாகக் கூறும் நீண்ட விடை இராவணன் பெருமையே பெரிதும் பேசப் பெறுகிறது. முனிவன் வேடத்தில் இவ்வாறு கூறுவதால் சீதை இராவணன் மீது விருப்பம் கொள்வாள் என எண்ணியதின் விளைவு இது. தானே தன் பெருமையைப் பரித்துரைக்க வேண்டிய அவலம் இராவணனுக்கு ஏற்படுவது காமக் கொடுமையால். 48 |