பிராட்டி-இராவண வாக்குவாதம்

3367.'வேதமும், வேதியர்
     அருளும் வெஃகலா,
சேதன மன்உயிர்
     தின்னும், தீவினைப்
பாதக அரக்கர்தம்
     பதியின் வைகுதற்கு
ஏது என்?- உடலமும் மிகை
     என்று எண்ணுவீர்!

    உடலமும் மிகை என்று எண்ணுவீர் - (துறப்பதற்குரிய தவம்
செய்தவர்) உடம்பையும் மிகுதி என நினைக்கும் தன்மையுடையவரே!;
வேதமும் வேதியர் அருளும் வெஃகலா - வேதங்களையும்
அவற்றிற்குரிய வேதியர்களின் கருணையையும் விரும்பாமல்; சேதன
மன்உயிர் தின்னும் -
பகுத்தறிவுடன் கூடிய நிலை பெற்ற
மானிடர்களை உண்கின்ற; பாதகத் தீவினை அரக்கர் தம் பதியின்
வைகுதற்கு ஏது என் -
பெரும் பாவம் தரும் கொடிய வினைகள்
புரியும் அரக்கர்களுடைய நகரில் தங்குவதற்குரிய காரணம் என்ன?

     உடல்மிகை என எண்ணுவது 'பிறப்பறுக்கல் உற்றார்க்கு
உடம்பும் மிகை' (345) என்ற குறளின் எதிரொலி காண்க. உடம்பு,
உருவுடம்பு அரு உடம்பு என இருவகைப்படும். அருவுடம்பு
இந்திரியவுணர்வும் காம விளைவுகளோடும் கூடிய மனம்.
இவ்வுடம்பால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இறைப்
பொழுது பொறாது முனிவர்கள் வீட்டின் கண்ணே விரைதலின்
'உடம்பும் மிகை' எனக் கருதுவர் எனப் பரிமேலழகர் உரைத்த உரை
(குறள் 345) இங்கு ஒப்பிடற்குரியது. மாதவர் வாழும் தண்ட
காரணியத்தை விட்டு்க் கொலை புரிந்து உயிர்களை உண்ணும்
அரக்கரிடம் சென்று தங்கிய காரணம் யாது எனச் சீதை கேட்கிறாள்.
அரக்கர் என்பவர் பாதகத் தீவினை செய்பவர் என்பது அவளது
நிலைபெற்ற கருத்தாம். இக்கருத்துடன் 'தீயாரைக் காண்பதுவும் தீதே...
தீயார் குணங்களுரைப்பதுவும் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவும்
தீது' எனும் மூதுரை (9) மொழியும் இங்குக் கருதற்குரியது.

     உயிர் உடம்புக்கு இலக்கணை.                             49