3368. | 'வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர்; புனல் திரு நாட்டிடைப் புனிதர் ஊர் புக நினைத்திலிர்; அற நெறி நினைக்கிலாதவர் இனத்திடை வைகினிர்; என் செய்தீர்!' என்றாள். |
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் - காட்டிலே பெருந் தவ முனிவரிடத்துத் தங்காதொழிந்தீர்; புனல் திரு நாட்டிடைப் புனிதர் ஊர் புக நினைத்திலிர் - நீர் வளமிக்க அழகிய நாடுகளில் தூயவர் நகர்களில் செல்ல நினையாதொழிந்தீர்; அறநெறி நினைக்கிலாதவர் இனத்திடை வைகினிர் - அறவழியை எண்ணியும் பார்க்காத தீய அரக்கர் கூட்டத்திடையே தங்கினிர்; என்செய்தீர் என்றாள் - என்ன செயல் செய்தீர் எனச் சீதை (இராவண சன்னியாசியிடம்) கேட்டாள். நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்வது போல் முனிவர் வாழும் காட்டில் அன்றோ முனிவராகிய நீர் தங்கியிருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடில் தூய மக்கள் வாழும் புனித நகர்க்குச் செல்லவாவது எண்ணியிருக்க வேண்டும். அச்செயல்களைச் செய்யாமல் பாவமே புரியும் அரக்கர் கூட்டத்தில் தங்கியதால் பெரும் அநீதி செய்தீர் எனச் சொல்லாமல் சொல்கிறாள் சீதை. நிலத்தியல் பால் நீர் திரிந்தற்றாகு மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு (குறள். 452) என்பதற்கிணங்க முனிவர் வேடத்திலிருப்பினும் அவர் கூடி வாழ்ந்த இனத்தவர்களின் அவர் மன அறிவும் திரிந்திருக்கும் எனச் சீதை சுட்டுகிறாள். இதனை 'இனத்திடை கைகினிர்' என்ற தொடரால் அறியலாம். 50 |