3369. | மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு இலான், "மறுவின் தீர்ந்தார், வெங் கண் வாள் அரக்கர்" என்ன வெருவலம்; மெய்ம்மை நோக்கின், திங்கள் வாள் முகத்தினாளே! தேவரின் தீயர் அன்றே; எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும்' என்றான். |
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு இலான் - சீதை அச் சொல் கூறி அறிவுறுத்தியது கேட்ட எல்லை கடந்து ஒழுகுவோனாம் இராவணன்; மறுவின் தீர்ந்தார் வெங்கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் - குற்ற மற்றவர் கொடியவர்களாம் வாள் வீசும் இராக்கதர் எனக் கூறியதும் அஞ்ச மாட்டோம்; மெய்ம்மை நோக்கின் - உண்மையாக ஆராயின்; திங்கள் வாள் முகத்தினாளே - சந்திரன் போல் ஒளி படைத்த முகமுடையவளே!; தேவரின் தீயர் அன்றே - (அவ்வரக்கர்கள்) தேவர்களைக் காட்டிலும் கொடியவர் அல்லரே; எங்கள் போலியர்க்கு நிருதரே நல்லார் போலும் என்றான் - எங்கள் போல்வார்க்கு அரக்கர்களே நல்லவர் என்று சொன்னான். வரம்பு இலான் - வலிமை வரம் போன்றவை பெற்றுப் பிறரை விடச் சிறந்தவனாயினும் அறவொழுக்கம் என்ற எல்லையைக் கடந்தவன். வெங்கண் - கொடுமை; கொடிய கண்களை உடையவர்கள் என்றுமாம். வெருவுதல் - அஞ்சி நடுங்குதல். தேவரின் - தேவர் போல எனவும் ஆம். போலியர் என்ற சொல்லில் இராவணனின் போலி வேடமும் தொனிப் பொருளாய் விளங்குகிறது. துறவிகள் சமநிலை உடையவராதலால் தேவர்க்கும் அரக்கர்க்கும் வேறுபாடு கருதோம் எனக் கூறியதாகவும் கொள்வர். போலும் : ஒப்பில் போலி. 51 |