3370.சேயிழை-அன்ன சொல்ல,- 'தீயவர்ச்
     சேர்தல் செய்தார்
தூயவர் அல்லர், சொல்லின், தொல் நெறி
     தொடர்ந்தோர்' என்றாள்;
'மாய வல் அரக்கர் வல்லர், வேண்டு
     உரு வரிக்க' என்பது,
ஆயவள் அறிதல் தேற்றாள்; ஆதலின்,
     அயல் ஒன்று எண்ணாள்.

    அன்ன சொல்ல - (இராவணன் அத்தகைய சொற்களைக் கூற;
சேயிழை - செவ்விய அணிகலன்கள் பூண்ட சீதை; தீயவர்ச் சேர்தல்
செய்தார் தூயவர் அல்லர் -
கொடியவரை நட்பாகச் சேர்ந்தவர்கள்
தூயவர் ஆகார்; சொல்லின் - விளக்கமாகக் கூறுவதாயின்; தொல்
நெறி தொடர்ந்தோர் என்றாள் -
பழைய தீய வழியில்
தொடர்புடையோர் எனக் கூறினாள்; மாயவல் அரக்கர் வேண்டு
உருவரிக்க வல்லர் என்பது -
மாயையுடைய வலிய இராக்கதர் தாம்
விரும்பும் வடிவம் கொள்ள ஆற்றல் உடையவர்கள் என்ற
உண்மையை; ஆயவள் அறிதல் தேற்றாள் - அத்தகையவள்
அறியாள்; ஆதலின் அயல் ஒன்று எண்ணாள் - ஆகையால்
வேறாக ஒன்றும் நினையாள்.

     'தீயவர்ச் சேர்தல் செய்தார் தூயவர் அல்லர்' என்ற கருத்து
'மனந் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா
வரும்' (குறள். 455) என்ற கருத்துடன் ஒப்புடைத்து. அதற்கேற்பச்
சிற்றினம் சேர்ந்தவர் சிற்றினத்தாரே எனச் சீதை முடிவு செய்கிறாள்.
அரக்கன் மாயையால் துறவி வேடம் பூண்டு வந்தனன் என்பதைத்
தெளியாள். காரணம் அரக்கர்க்குத் தாம் வேண்டிய வடிவெடுக்கும்
ஆற்றல் உள்ளது என்பதை அறியா நிலையாகும். 'அயல் ஒன்று
எண்ணாள்' என்பது சீதையின் தூய மன நிலையைக் காட்டும்.

     சேயிழை- பண்புத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. 52