3371. | 'அயிர்த்தனள் ஆகும்' என்று, ஒர் ஐயுறவு அகத்துக் கொண்டான்; பெயர்த்து, அது துடைக்க எண்ணி, பிறிதுறப் பேசலுற்றான்: 'மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு, அனைய வல்லோர் இயற்கையின் நிற்பது அல்லால், இயற்றல் ஆம் நெறி என்?' என்றான். |
அயிர்த்தனள் ஆகும் என்று - (சீதை கூறிய சொற்களால்) தன் மீது அவள் சந்தேகம் கொண்டவள் ஆகும் என; ஒர் ஐயுறவு அகத்துக் கொண்டான் - ஒரு சந்தேகத்தை மனத்துள் கொண்ட இராவணன்; அது துடைக்க எண்ணிப் பெயர்த்து - அதனைத் தீர்த்து ஒழிக்கக் கருதி, மீண்டும்; பிறிது உறப் பேசலுற்றான் - வேறொரு வகையில் பேசத் தொடங்கினான்; மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு - அறிவின் மாறுபாடு அற்ற உலகம் மூன்றில் வாழும் தேவர், நாகர், மானிடர் என்பவர்க்கு; அனைய வல்லோர் - அத்தகைய வலிமையுடைய அரக்கருடைய; இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் - இயல்பான பண்பைப் பின்பற்றி நடப்பதல்லாமல் செய்யக்கூடிய வழி வேறு என்ன உள்ளது எனக் கேட்டான். ஐயுறவு - சந்தேகம். சீதை தன் மேல் ஐயப்படின் தான் கருதிய காரியம் கை கூடாது என முதலில் அவள் கொண்ட ஐயப்பாட்டை நீக்க முனைகிறான். எனவே, தான் முன் பேசிய மொழிகளை மாற்றிப் பேசும் போது போலி வேடத்திற்கேற்பக் கூறும் சொற்களும் போலிச் சொற்கள் ஆகின்றன. வலிய அரக்கர் வழியில் நடப்பது அல்லாமல் வேறு வழி என்ன என்று தன் இயலாமையைக் கூறிச் சீதையின் பரிவு கிட்டுமா என முயல்கின்றான். ஐயம் + உறவு - ஐயுறவு. விகாரம். 53 |