3373. | மானவள் உரைத்தலோடும், 'மானிடர், அரக்கர்தம்மை, மீன் என மிளிரும் கண்ணாய்! வேர் அற வெல்வர் என்னின், யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும்; இன்னும், கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும்' என்றான். |
மானவள் உரைத்தலோடும் - பெருமை மிக்க சீதை இவ்வாறு கூறியவுடன், (இராவணன்); மீன் என மிளிரும் கண்ணாய் - மீன் போலப் பிறழ்ந்து ஒளிவிடும் கண்ணை உடையவளே!; அரக்கர் தம்மை மானிடர் வேர் அறவெல்வர் என்னின் - இராக்கதர்களை மனிதர் அடி வேரில்லாமல் வெற்றி கொள்வார்கள் என்றால்; யானையின் இனத்தை எல்லாம் இளமுயல் கொல்லும் - யானைக் கூட்டம் அனைத்தையும் இளைய முயல் கொன்று விடும்; இன்னும் கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் - மேலும் வளைந்த நகமுடைய ஆண் சிங்கங்களின் கூட்டத்தை மான் கொன்று விடும் என்று கூறினான். மானவன் என்பதன் பெண்பால் மானவள், மான்போன்ற மருண்ட பார்வையுடையவள் என்றுமாம். மிளிர்தல் - ஒளிவிடுதல் யானையை முயல் கொல்லுதலும் சிங்கத்தை மான் கொல்லுதலும் உலகில் நடவாதன. எனவே அரக்கரை மனிதர் கொல்லுதல் நடவாத செயல் ஆகும். எனவே, இப்பாடலில் பொய்த்தற் குறிப்பு உளது. 55 |