3374.'மின் திரண்டனைய பங்கி
     விராதனும், வெகுளி பொங்கக்
கன்றிய மனத்து வென்றிக்
     கரன் முதல் கணக்கிலோரும்,
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர்
     போலும்' என்றாள்-
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி, மழைக்
     கண்நீர் அருவிசோர்வாள்.

    (அதைக் கேட்ட சீதை) மின்திரண்டனைய பங்கி விராதனும் -
மின்னல்கள் ஒன்று திரண்டன போலச் சிவந்த தலைமயிருடைய
விராதனும்; வெகுளி பொங்கக் கன்றிய மனத்து வென்றிக் கரன்
முதல் கணக்கிலோரும் -
சினம் மிகுந்து காய்ந்து முதிர்ந்த மனத்தை
உடைய வெற்றிமிக்க கரன் முதலான எண்ணற்ற அரக்கர்களும்;
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள் - இறந்த
போது எழுந்த பேராரவாரத்தை நீர் ஒரு சிறிதும் கேட்கவில்லையோ எனக்
கேட்டாள்; அன்று அவர்க்கு அடுத்தது உன்னி - அப்போது
அவ்வரக்கர்களுக்கு ஏற்பட்ட முடிவை எண்ணி; மழைக்கண் நீர் அருவி
சோர்வாள்-
வருத்தத்தால் மழை போலக் கண்ணீரை அருவியாக வடித்தாள்.

     மின் - ஒளியுமாம். பங்கி - ஆணின் தலைமயிர். 'பத்திரக்
கடிப்பு மின்னப் பங்கியை வம்பிற் கட்டி' என வருதல் காண்க (சீவக.
2277). அரக்கர் பண்பாக வெகுளியும் அது தோன்றியதால் அவர்கள்
மனம் கன்றியிருந்ததையும் சீதை எடுத்துக் கூறுவாள். எனினும்
அத்தகையோர் செய்த இடையூறுகளையும் அவர்கட்கேற்பட்ட
முடிவையும் எண்ணிக் கண்ணீர் விட்டாள் என்பது பெண் மனத்தைக்
காட்டும். மானைத் தொடர்ந்த இராமனுக்கு ஏற்பட்ட துன்பத்தை
எண்ணும் போது அவளை அறியாமல் கண்ணீர் பெருகியது எனவும்
உரைப்பர். இரு வேறுபட்ட உணர்வுகள் உடனுக்குடன் பொங்கும்
நிலையை இது சுட்டும் என்பர்.                                56