3375. | 'வாள் அரி வள்ளல்; சொன்ன மான் கணம் நிருதரானார்; கேளொடு மடியுமாறும், வானவர் கிளருமாறும், நாளையே காண்டிர் அன்றே; நவை இலிர், உணர்கிலீரோ? 'மீள அருந்த தருமம்தன்னை வெல்லுமோ பாவம்? என்றாள். |
நவை இலிர் - குற்றம் இல்லாதவரே!; சொன்ன வாள்அரி வள்ளல் - நீங்கள் கூறிய சிங்கமே இராமனாவார்; நிருதர் ஆனார் மான் கணம் - அரக்கர்களே மான் கூட்டத்திற்கு ஒப்பு ஆவார்கள்; கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும் - அரக்கர் சுற்றத்தோடு அழியும் விதத்தையும் தேவர்கள் அதனால் கிளர்ச்சியுறும் விதத்தையும்; நாளையே காண்டிர் அன்றே - விரைவில் பார்க்கப் போகின்றீர் அல்லவா?; மீள அருந்தருமம் தன்னை பாவம் வெல்லுமோ - விலக்க முடியாத தருமத்தைப் பாவம் வென்று விடுமோ?; உணர்கிலீரோ என்றாள் - வெல்லாது என்பதை அறிய மாட்டீரோ எனக் கேட்டாள் சீதை. முன்னர் இராவணன் சிங்கத்தை அரக்கர்க்கும் மானை மானிடராம் இராமலக்குவர்க்கும் ஏற்கும் வகையில் கூறியதை (3373) உடனுக்குடன் இராமனே சிங்கம் என மாற்றுகிறாள். அரக்கர் முன்னர் இராமன் கையில் மடிந்ததையும் அறிந்தவள் ஆதலின் இவ்வாறு மறுக்கிறாள். இராமன் அரக்கரைக் கிளையோடு வேரறுப்பான் என்று தான் நம்புவதை வெளிப்படுத்துகிறாள். இராவண சன்னியாசியைப் பற்றி எவ்வித ஐயமும் கொள்ளாதவள் ஆதலின் 'நவை இலிர்' என்கிறாள். காப்பிய அறம் வெளிப்படும் வகையில் 'மீள அருந்தருமம் தன்னை வெல்லுமோ பாவம்' எனப் பொதுமையில் கேட்டு உண்மையை நிலை நாட்டுகிறாள். அறம் வெல்லும் பாவம் தோற்கும் எனப் பின்னரும் வரும் (4929) அன்றே - தேற்றப் பொருளில் உளது. இது வேற்றுப் பொருள் வைப்பணி. 57 |