இராவணன் சீற்றமும் மாய வேடம் களைதலும்

3376.தேனிடை அமுது அளாய அன்ன மென்
     சில சொல் மாலை,
தானுடைச் செவிகளூடு தவழுற,
     தளிர்த்து வீங்கும்
ஊனுடை உடம்பினானும், உருகெழு
     மானம் ஊன்ற,
'மானிடர் வலியர்' என்ற மாற்றத்தால்,
     சீற்றம் வைத்தான்.

    தேனிடை அமுது அளாய அன்ன - தேனோடு அமுதத்தைக்
கலந்தது போன்ற (சீதையின்); மென்சில சொல் மாலை -
மென்மையான சில சொற்களின் வரிசை; தான்உடைச் செவிகள் ஊடு
தவழுற -
தன்னுடைய காதுகள் வழியே நுழைய; தளிர்த்து வீங்கும்
ஊனுடை உடம்பினானும் -
மனம் மகிழ்ந்து பூரிக்கும் தசைக்
கொழுப்பு மிக்க உடம்புடைய இராவணனும்; மானிடர் வலியர் என்ற
மாற்றத்தால் -
(அரக்கரைவிட) மனிதர்கள் (இராமலக்குவர்)
வலிமையுடையவர் எனும் சொற்களால்; உருகெழு மானம் ஊன்ற -
அச்சம் மிகுதற்குக் காரணமான தன்மானம் ஓங்கிட; சீற்றம்
வைத்தான் -
கோபம் கொண்டான்.

     தேனிடை அமுது கலத்தல் மிக்க இனிமைப் பண்பைக் காட்டும்.
இராமன் அனுமனிடம் சீதையின் மொழிகளைப் பற்றிக் கூறும் போது
'சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை; தேன் இல்லை உள என்றாலும்'
(4496) என்பான். உருகெழுமானம். அச்சமிடும் மான உணர்ச்சி,
குலப்பற்றுமாம். காமத்தை விடச் சினம் மிகுந்த நிலை இது. அமுதம்
சீதையின் அழியாப் பேற்றையும் ஊனுடை உடம்பு என்பது
இராவணனின் அழிவுறு கேட்டையும் உள்ளுறை உணர்வாகச் சுட்டும்.
'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி' (குறள். 306) என்பதற்கேற்ப
இராவணன் கிளையொடு அழிவதற்குக் காரணம் ஆயிற்று. இந்நிலை
பின்னரும் 'சினத்தொடும் கொற்றம் முற்றி' (9224) என்று இராவணன்
பேசுவது காண்க.                                           58