3377. சீறினன், உரைசெய்வான்,' "அச்சிறு
     வலிப் புல்லியோர்கட்கு
ஈறு, ஒரு மனிதன் செய்தான்" என்று
     எடுத்து இயம்பினாயேல்
தேறுதி நாளையே; அவ் இருபது திண்
     தோள் வாடை
வீறிய பொழுது, பூளைவீ என
     வீவன் அன்றோ?

    சீறினன் உரை செய்வான் - கோபம் கொண்ட இராவணன்
விடை கூறினான்; அச்சிறு வலிப் புல்லையோர்கட்கு - நீ கூறிய
அந்த (விராதன் போன்ற) சிறு வலிமையுடைய அற்பர்களுக்கு; ஒரு
மனிதன் ஈறு செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் -
ஒரு
மனிதனாம் இராமன் முடிவைக் கொடுத்தான் என்று புகழ்ந்து கூறுவாய்
என்றால்; நாளையே தேறுதி - அதன் முடிவை நாளையே நீ
தெளிவாக அறிவாய்; அவ் இருபது திண்தோள் வாடை வீறிய
பொழுது -
அந்த இராவணனின் இருபது வலிய தோள்களின்
பெருங்காற்று வீசிய காலத்து; பூளை வீ என வீவன் - சிறு பூளைப்
பூப்போல அந்த மனிதன் அழிவான் : அன்றோ - ஓகாரம்; வினாப்
பொருளில் வந்தது.

     முன்னைய பாடலில் சீற்றம் வைத்தான் என முடிந்தது, இதன்
தொடக்கமாகச் சீறினை என அமைத்துள்ளமை எண்ணத்தக்கது.
விராதன் முதலியோர் தன்னைச் சார்ந்தவர் எனினும், அவர்களைச்
சிறு வலிப் புல்லியோர் என்றது தன்னையே இராவணன் தருக்கி
நின்றமை புலனாம். பெரும் புயலில் சிறு பூளைப் பூ எதிர் நிற்க
இயலாது. அது போல் இராவணனின் இருபது தோள் வீச்சிற்கு ஒரு
மனிதன் ஆற்றான் என்று தற்பெருமை கொள்வது இங்கு
வெளிப்படுகிறது. நுதல் விழிப் பொங்கு கோபம் சுடப் பூளை வீ
அன்ன தன் அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான்'
எனச் சிவன் காமனை எரித்த வரலாற்றில் முன்னே இந்நூல் பூளைப்
பூவைக் காட்டியுள்ளது (339)

     'அன்றோ' தேற்றப் பொருளில் வந்த வினா எனவும்கொள்ளலாம். 59