3378. | 'மேருவைப் பறிக்க வேண்டின், விண்ணினை இடிக்க வேண்டின், நீரினைக் கலக்க வேண்டின், நெருப்பினை அவிக்க வேண்டின், பாரினை எடுக்க வேண்டின், பல வினை,-சில சொல் ஏழாய்! யார் எனக் கருதிச் சொன்னாய்?- இராவணற்கு அரிது என்?' என்றான். |
சிலசொல் ஏழாய் - சில சொற்கூறும் பேதைப் பெண்ணே! மேருவைப் பறிக்க வேண்டின் - மேருமலையைப் பெயர்த்தெடுக்க விரும்பினாலும்; விண்ணினை இடிக்க வேண்டின் - வானத்தை இடிக்க விரும்பினாலும்; நீரினைக் கலக்க வேண்டின் - கடல்களிலுள்ள நீரைக் கலக்க விரும்பினாலும்; நெருப்பினை அவிக்க வேண்டின் - வடவா முகாக்கினியை அவிக்க விரும்பினாலும்; பாரினை எடுக்க வேண்டின் - உலகத்தைப் பெயர்த்தெடுக்க விரும்பினாலும்; பலவினை - இப்படிப்பட்ட பல அரிய செயல்களுள்; இராவணற்கு அரிது என் - இராவணன் செய்வதற்கு முடியாத செயல் எது?; யார் எனக் கருதிச் சொன்னாய் என்றான் - (அவனை) யார் என்று எளிமைப் படக் கூறினாய் என்று கேட்டான் இராவணன். நிலம், நீர், நெருப்பு, வான் ஆகியவற்றைக் கூறியதால் காற்றும் இதனுள் உபலட்சணத்தால் அடங்கும். பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்பவன் தன் மனத்தை அடக்கிக் காமத்தை ஆள வலிமையற்றிருக்கும் இராவணன் நிலையை உய்த்துணர வைக்கிறது இம்மொழிகள் 'மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே வான் வீழ்க்குவனே வளி மாற்றுவனெனத் தான் முன்னிய துறைபோகலின் என வேந்தன் உள்ளியது முடிக்கும் சிறப்பைப் பட்டினப்பாலை காட்டும் (பட்டின. 27 - 273). சில சொல், பலவினை என்பவற்றில் முரண்தொடை உளது. சீதை இராவணன் பண்பிற்காணும் முரண்பாடுகளுள் இதுவும் ஒன்றாம். 60 |