3380. | என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம்; திக்கில் சென்றன திரள் தோள்; வானம் தீண்டின மகுடம்; திண் கை ஒன்றொடு ஒன்று அடித்த, மேகத்து உரும் என; எயிற்றின் ஒளி மென்றன; வெகுளி பொங்க, விட்டது மாய வேடம். |
என்று அவள் உரைத்தலோடும் - எனச் சீதை சொன்னவுடன்; நயனம் எரிந்தன - (இராவணனின் இருபது) கண்களும் தீயை உமிழ்ந்தன; திரள் தோள் திக்கில் சென்றன - திரண்ட தோள்கள் திசைகளை அளாவி வளர்ந்தன; மகுடம் வானம் தீண்டின - பத்து முடிகளும் மேலுலகத்தைத் தொட்டன; திண்கை ஒன்றொடு ஒன்று அடித்த - இருபது வலிய கைகளும் ஒன்றுடன் ஒன்று அறைந்தன; எயிற்றின் ஒளி மேகத்து உரும் என மென்றன - பல்லின் வரிசை மேகத்தினின்று எழும் இடி போலப் பேரொலி செய்து கடித்தன; வெகுளி பொங்க மாய வேடம் விட்டது - கோபம் மிகுந்ததால் மாயையால் தரித்த தவவேடம் இராவணனை விட்டு நீங்கியது. வெகுளிச் சுவையால் ஏற்படும் மெய்ப்பாடுகளை இப்பாடல் நன்கு வெளிப்படுத்துகிறது. விசுவாமித்திரன் சினந்த போது 'மேல் நிவந்த கொழுங் கடைப் புருவம் நெற்றி முற்றச் சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்;' (327) எனக் காட்டியது இந்நூல். மேலும் இடித்து உரப்பி, 'வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென்' என்று அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் புடைத்து நின்று' எனச் சுக்கிரீவன் வெகுளி கொண்ட தோற்றம் கிட்கிந்தா காண்டத்தில் காணப்பெறும் (3946). காமத்தை மானம் வெல்லத் தவவேடம் மாறி, உண்மை உரு வெளிப்பட்டது. வெகுளியின் விளைவு இது. 62 |