சீதையின் ஐயப்பாடும் அரக்கனின் கோர வடிவமும்

3381.' இரு வினை துறந்த மேலோர் அல்லர்கொல்
     இவர்? என்று எண்ணி,
அரிவையும், ஐயம் எய்தா, 'ஆர் இவன்தான்?'
     என்று, ஒன்றும்,
தெரிவு அரு நிலையளாக, தீ விடத்து
     அரவம் தானே
உரு கெழு சீற்றம் பொங்கி, பணம் விரித்து
     உயர்ந்தது ஒத்தான்.

     அரிவையும் - சீதையும்; இவர் இருவினை துறந்த மேலோர்
அல்லர் கொல் என்று எண்ணி -
இத்தவ வேடம் கொண்டவர்
நல்வினை தீவினை எனும் இருவேறுபட்ட செயல்களையும் விட்டு
நீங்கிய துறவி அல்லர் என நினைத்து; ஐயம் எய்தா - சந்தேகம்
கொண்டு; ஆர் இவன் தான் என்று ஒன்றும் தெரிவு
அருநிலையளாக -
இத்தகையோன் யார் என எதுவும் அறிதற்கு
முடியாத நிலையுடையவளாகி நிற்க; தீவிடத்து அரவம் - கொடிய
நஞ்சுள்ள பாம்பு; தானே உருகெழு சீற்றம் பொங்கி - தானாக
அச்சமூட்டும் வகையில் கோபம் மேற்கிளம்ப; பணம் விரித்து
உயர்ந்தது ஒத்தான் -
தன் படம் விரித்து எழுந்து உயர்ந்தது போல
(இராவணன்) விளங்கினான்.

     இராவணனின் துறவித் தோற்றமே சீதையின் உள்ளத்தில்
ஐயமின்றிப் பதிந்திருந்ததால் 'மேலோர்' என்ற நினைவே முதலில்
வருகிறது. பின்னர் அவனது உருவ மாற்றத்தைக் கண்டு 'மேலோர்
அல்லர் கொல்' என ஐயுறுகிறாள். அப்போதும் 'யார்' என எண்ணம்
கொண்டாளே ஒழிய அரக்கர் மாறுவேடமிட்டு வந்தார் என
நினைக்கவில்லை. இராவணன் பத்துத் தலைகளுடன் இருபது
கைகளுடன் சினந்தோங்கிய நிலையில் எழுந்த தோற்றம் பல
தலைகளையுடைய நச்சுப் பாம்பு தன் படம் விரித்து எழுந்தது போல்
தோன்றுகிறது.                                         63