3382. ஆற்ற வெந்துயரத்து அன்னாள் ஆண்டு
     உற்ற அலக்கண் நோக்கின்,
ஏற்றம் என் நினைக்கல் ஆகும்? எதிர்
     எடுத்து இயம்பல் ஆகும்
மாற்றம் ஒன்று இல்லை; செய்யும்
     வினை இல்லை; வரிக்கல் ஆகாக்
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர்
     என, குலைவு கொண்டாள்.

    ஆற்ற வெந்துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண்
நோக்கின் -
(இராமனுக்குற்ற) மிகக் கொடிய துயரத்தை அடைந்துள்ள
சீதை அப்போது (இராவணன் உருவமாற்றத்தால்) அடைந்த
துன்பத்தைக் கருதின்; ஏற்றம் என் நினைக்கல் ஆகும் -
அதனைவிட மிக்க துன்பம் வேறு எதை நினைக்க முடியும்?; எதிர்
எடுத்து இயம்பல் ஆகும் மாற்றம் ஒன்று இல்லை -
இதற்கு
ஒப்பாக வேறு சொல்லக் கூடிய சொல் ஒன்றும் இல்லாமல் போயிற்று;
செய்யும் வினை இல்லை - அவள் அவனைவிட்டுத் தப்பும் செயலும்
தெரியவில்லை; வரிக்கல் ஆகாக் கூற்றம் வந்து உற்ற காலத்து
உயிர் என(க்) குலைவு கொண்டாள் -
கட்டமுடியாத யமன் வந்து
சேர்ந்த போது உயிர் நடுங்குவது போல நடுக்கம் அடைந்தாள்.

     ஆற்ற - மிக அலக்கண் - துன்பம் சஞ்சலமானகண். துன்பம்
வரும்போது கண் கலங்கும்; அதனால் அலக்கண் என்பது
துன்பத்தைக் குறித்தது. காரியத்தின் பெயர் காரணத்திற்கு வந்த
இலக்கணை. சீதை பட்ட துன்பத்தைக் கூறச் சொற்கள்
கிடைக்கவில்லை. மாற்று வினை செய்ய வழியும் தெரிய வில்லை.
வரித்தல் - கட்டுதல். கூற்றத்திற்கு உயிர்களின் முடிவு வந்ததும் அதைத்
தான் கட்டுவதன்றித் தான் கட்டுப்படாத நிலை வரிக்கல் ஆகா என்பதற்கு
விரும்பத்தகாத எனவும் உரைப்பர். கூற்றம் - உயிரை உடலிலிருந்து
கூறுபடுத்திப் பற்றிச் செல்வதால் இயமனைக் குறித்தது எனவும், சீதைக்கு
மாற்றமில்லை, வினையும் இல்லை என்ற திகைப்புண்டாகிய நிலை இது.   64