3383. | 'விண்ணவர் ஏவல் செய்ய, வென்ற என் வீரம் பாராய்; மண்ணிடைப் புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய்; பெண் எனப் பிழைத்தாய் அன்றேல்; உன்னை யான் பிசைந்து தின்ன எண்ணுவென் என்னின், பின்னை என் உயிர் இழப்பென் என்றான். |
விண்ணவர் ஏவல் செய்ய வென்ற என் வீரம் பாராய் - தேவர்கள் யான் ஏவிய குற்றேவல் செய்ய அவர்களை வென்ற என் வீரத்தை நீ கருதாமல்; மண்ணிடைப் புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் - இவ்வுலகில் இழிந்த புழுப் போல் வாழும் மனிதரை வலிமை உடையவர் எனக் கூறினாய்; பெண் எனப் பிழைத்தாய் - ஒரு பெண் என்ற காரணத்தால் நீ உயிர் பிழைத்துள்ளாய்; அன்றேல் - அல்லாவிடில்; உன்னையான் பிசைந்து தின்ன எண்ணுவென் - உன்னை என் கைகளால் பிசைந்து உண்ண நினைப்பேன்; என்னின் - அவ்வாறு எண்ணிச் செயல்பட்டேனென்றால்; பின்னை என் உயிர் இழப்பென் என்றான்- (உன்னை அடைய முடியாததால்) பின்னர் என் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்று கூறினான் இராவணன். தேவர்கள் தனக்கு ஏவல் செய்யும் பெருமையை முதலில் கூறினான். பின்னர் மானிடர் புழுவை விட இழிந்தவர் என்று தன் உயர்வை மேலும், நிலை நாட்ட முனைகிறான். காம நிலை மாறி வெகுளி எழுந்ததின் விளைவு தற்பெருமையை எடுத்துக் கூறுகிறான். உன்னை யான் பிசைந்து தின்ன எண்ணுவென் என்பதால் ஊன் உண்டு வாழும் அரக்க வாழ்வைக் காட்டும். சினத்தின் மிகுதியால் பழி வாங்கும் முறையில் சீதையைப் பிசைந்து தின்ற பின் அவளை அடைய முடியாமையால் தானும் இறந்துபடும் நிலையை உணர்கிறான்; 'பின்னை என்னுயிர் விண்ணவர் ஏவல் செய்ய வென்ற வீரம் ஒருபால், தன் உயிர் இழக்கும் வீழ்ச்சி ஒருபால் - இராவணன் கூற்றின் இருதுருவப் பாங்கு இது. 65 |