3384. | 'குலைவுறல், அன்னம்! முன்னம், யாரையும் கும்பிடா என் தலைமிசை மகுடம் என்ன, தனித்தனி இனிது தாங்க, அலகு இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய, உலகம் ஈர்-ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி' என்றான். |
அன்னம் - அன்னப்பறவை போன்ற மெல்லியலே!; குலைவுறல்- நடுக்கம் கொள்ள வேண்டாம்; முன்னம் யாரையும் கும்பிடா என் தலைமிசை மகுடம் என்ன - இதற்கு முன் எவரையும் கும்பிட்டு வணங்காத என் தலைகள் மீது மணி முடி போல; தனித்தனி இனிது தாங்க - ஒவ்வொரு தலையிலும் முறையே இன்பமாக உன்னை உயர்த்தி வைத்துக் கொண்டு; 'அலகு இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய - எண்ணற்ற அணிகலன் பூண்ட அரம்பையர்கள் உன் திருவடிகளில் முறைப்படி நீ இடும் ஏவலைச் செய்ய; உலகம் ஈர் ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான்- பதினான்கு உலகங்களையும் அரசாளும் பெரும் செல்வ வாழ்வில் மகிழ்ந்திருப்பாயாக என வேண்டினான் இராவணன். முன் கொண்ட வெகுளி மாற, மீண்டும் இராவணன் காமம் மீதூர இனிய மொழிகளைக் கூறத் தொடங்குகிறான். இவ்வாறு மெய்ப்பாடுகள் மாறி மாறி வரும் நிலையைக் கம்ப நாடகம் நன்கு காட்டுகிறது. இராவணன் யாரையும் வணங்கா நிலை, முன்னர்ச் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் 'வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிறை வயங்க மன்னோ (3069) என்று கூறியதாலும் உணரப்படும். தலை வணங்காத் தலைமை நிலை மாறி இருபது தலை மீதும் மணிமுடி போலச் சீதையைத் தாங்குவதாகக் கூறும் போது இராவணனின் வீழ்ச்சி புலனாகிறது. மகளிர் மனத்தைச் செல்வம் மாற்றும் என்ற நினைப்பிலே பதினான்கு உலகங்களையும் ஆளும் செல்வம் பெறுவாள் என்பதையும் கூறுகிறான். அன்னம் - உவம ஆகுபெயர் அண்மை விளி ஏற்று வந்துளது. 66 |