கற்பின் கனலி கனன்று எழுதல் 3385. | செவிகளைத் தளிர்க் கையாலே சிக்குறச் சேமம் செய்தாள்; 'கவினும் வெஞ் சிலைக் கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை, புவியிடை ஒழுக்கம் நோக்காய்; பொங்கு எரி, புனிதர் ஈயும் அவியை நாய் வேட்டதென்ன, என் சொனாய்? அரக்க!' என்னா, |
(அது கேட்ட சீதை) செவிகளைத் தளிர்க்கையாலே சிக்குறச் சேமம் செய்தாள் - தன் காதுகளை மெல்லிய தளிர் போன்ற கைகளாலே அழுத்தமாக மூடிக் கொண்டாள்; கவினும் வெஞ்சிலைக் கை வென்றிக் காகுத்தன் கற்பினேனை - அழகிய கொடிய வில்லை ஏந்திய கையும் வெற்றியும் உடைய இராமன் திறத்துக் கற்பு பூண்ட (அவன் மனைவியாகிய) என்னை; புவியிடை ஒழுக்கம் நோக்காய் - உலகில் உயர்ந்தோர்க்குரிய ஒழுக்கத்தை எண்ணிப் பாராதவனாய்; பொங்கு எரி(ப்) புனிதர் ஈயும் அவியை நாய் வேட்ட தென்ன - வளர்ந்தெரியும் வேள்வித் தீயில் தூய முனிவர் (தேவர்க்காக) இடும் அவிர்ப்பாகத்தை நாய் விரும்பினாற் போல; என் சொனாய் அரக்க என்னா - என்ன வார்த்தை சொன்னாய் அரக்கனே என்று சொல்லி. இராவணன் கூறிய சொற்கள் கேட்கத் தக்கன அல்ல ஆதலால் தன் செவிகளைக் கைகளால் மூடிக் கொண்டாள். சிக்கு - கெட்டி உறுதி எனலுமாம். சீதை தன்னை யாரென்று இராவணனிடம் கூறும் போதும் 'காகுத்தன் மனைவி' என்றது (3357) போல இங்கும் அப்பெயரே சுட்டினாள். தேவர்க்குரிய அவி உணவு போல உயர்ந்த கற்புடை நிலையில் சீதை இருப்பதையும் நாய் போல் இழிந்த நிலையில் இராவணன் இருப்பதையும் உவமையால் அறியலாம். 'அவியை நாய் வேட்டதென்ன' என்று உவமை சொன்னவள், அதற்குரிய உவமேயத்தை விரித்துரைக்கவில்லை. கற்புடைத் தேவி அதனைச் சொல்லக் கூசினாள். அதனை விரிக்காமல், 'என் சொன்னாய், அரக்க' என்று வினவி முடித்தாள் - நயத்தக்க நாகரிகம் உணர்க. அடியவரைக் காப்பதால் அழகும் பகைவரை அழிப்பதால் வெம்மையும் கொண்டதாக இராமன் வில் போற்றப் பெறுகிறது. இது வரை முனிவர் என இராவணனை மதித்த நிலை மாறி 'என் சொன்னாய், அரக்க!' என இழிவு படக் கேட்கிறாள் சீதை. கவினும் - எதிர்காலப் பெயரெச்சம். 67 |