3386.'புல் நுனை நீரின் நொய்தாப்
     போதலே புரிந்து நின்ற
என் உயிர் இழத்தல் அஞ்சி,
     இற்பிறப்பு அழிதல் உண்டோ?
மின் உயிர்த்து உருமின் சீறும்
     வெங் கணை விரவாமுன்னம்,
உன் உயிர்க்கு உறுதி நோக்கி,
     ஒளித்தியால் ஓடி' என்றாள்.

    புல்நுனை நீரின் நொய்தாப் போதலே புரிந்து நின்ற -
புல்லின் நுனியில் தங்கிய நீர்த்துளி போன்று அற்பமாய் ஆவி ஆகிப்
போவதையே தன் தொழிலாக விரும்பிச் செய்கின்ற; என் உயிர்
இழத்தல் அஞ்சி இற்பிறப்பு அழிதல் உண்டோ -
என்னுடைய
உயிரை விட்டு விடுவதற்குப் பயந்து நற்குலத்தில் பிறந்த பெருமையை
அழியும்படி செய்வதுண்டோ? (இல்லை); மின் உயிர்த்து உருமின்
சீறும் வெங் கணை விரவா முன்னம் -
மின்னலென ஒளிவிட்டு
இடியெனச் சீறித் தாக்கும் கொடிய அம்பை (இராமன் விட, உன்னை
வந்து) தைத்து உன்னைக் கொல்வதற்கு முன்னரே; உன் உயிர்க்கு
உறுதி நோக்கி -
உன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பைக் கருதி; ஓடி
ஒளித்தி என்றாள் -
இவ்விடம் விட்டு ஓடி மறைந்து கொள் எனக்
(இராவணனை எச்சரிக்கை செய்து) கூறினாள் சீதை; ஆல் - அசை.

     வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்த்தப் புல் நுனி நீர்
உவமையாகும். ’புன்னுனி மேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி'
என நாலடியாரும் (பாடல் 34) கூறும். இற்பிறப்பு என்பதன் உயர்வு.
அனுமன் மொழியிலும் 'இற்பிறப்பு என்பது ஒன்றும் ...களிநடம் புரியக்
கண்டேன்' (6035) என வெளிப்படும். இராமனின் அம்பின் ஒளிக்கு
மின்னலும் ஆற்றலுக்கு இடியும் உவமை ஆயின. சீதை தன்
பண்பிற்கேற்ப இராமன் அம்பு வாராமுன் ஓடி ஒளிந்து கொள்ளுமாறு
இராவணனை எச்சரிக்கிறாள். இதனால் இராமனின் பெருமையும்
விளங்கும்.

     இற்பிறப்பு கற்பிற்கு இலக்கணை.                           68