ஆசையை விளம்பி, அரக்கன் சீதைஅடிவணங்கல் 3387. | என்று அவள் உரைக்க, நின்ற இரக்கம் இல் அரக்கன், 'எய்த உன் துணைக் கணவன் அம்பு, அவ் உயர் திசை சுமந்த ஓங்கல் வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால், குன்றிடைத் தொடுத்து விட்ட பூங் கணைகொல் அது' என்றான். |
என்று அவள் உரைக்க - என்று சீதை சொல்ல; நின்ற இரக்கம் இல் அரக்கன் - அவன் முன் நின்ற இரக்கமற்ற அரக்கனாம் இராவணன்; உன்துணைக் கணவன் எய்த அம்பு - உன்னுடைய வாழ்க்கைத் துணைவனான கணவன் ஏவிய அம்பு; அவ் உயர் திசை சுமந்த ஓங்கல் வன்திறல் மருப்பின் ஆற்றல் - அந்தச் சிறந்த திக்குகளைத் தாங்கிய மலை போன்ற யானைகளின் வலிய திறமை வாய்ந்த தந்தங்களின்; ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் - வலிமையை அழித்த என் மார்பகத்தில் தைக்க வந்தால்; குன்றிடைத் தொடுத்து விட்ட பூங்கணை கொல் அது என்றான் - மலையிடத்து தொடுத்து ஏவிவிட்ட மலரம்பு போல் ஆகும் எனக் கூறினான். பெண்ணென்றும் பார்க்கவில்லை. உலக ஒழுக்கமும் பார்க்கவில்லை. ஆதலால் அரக்கன் மனத்தில் இரக்கமில்லை. 'உன்துணைக் கணவன்' என்ற தொடரில் உன்போல் பெண் தன்மை உடைய கணவன் என்ற இகழ்ச்சியும் தொனிக்கிறது. ஓங்கல் - மலை. இங்கு மலை போன்ற யானையைக் குறிப்பதால் உவமை ஆகுபெயர். இராவணன் மார்புக்குக் குன்றும், இராமன் அம்பிற்குப் பூங்கணையும் உவமையாம். குன்றின் மேல் எறிந்த மலர் அதற்கு எத்தீங்கும் விளைவிக்காதது போன்று இராமன் அம்பு தன்னை ஒன்றும் செய்யாது எனச் சுட்டினான். கொல்-அசைநிலை. 69 |