3388. | அணங்கினுக்கு அணங்கனாளே! ஆசை நோய் அகத்துப் பொங்க, உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி, உம்பர்க் கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள்' என்னா, வணங்கினன்-உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான். |
உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் - இந்த மண்ணுலகைத் தாங்கி நிற்கும் மலையைக் காட்டிலும் ஆற்றல் மிக்க தோளை உடைய இராவணன்; அணங்கினுக்கு அணங்கனாளே - தெய்வப் பெண்ணுக்கு ஒரு தெய்வப் பெண் போன்றவளே!; ஆசை நோய் அகத்துப் பொங்க - காமம் ஆம் வியாதி என் மனத்தில் வளர; உணங்கிய உடம்பினேனுக்கு - வாடிய உடலையுடைய எனக்கு; உயிரினை உதவி - (சாக உள்ள) என் உயிரை (உன் கருணையால்) காப்பாற்றி எனக்களித்து; உம்பர்க் கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும்பதம் கைக்கொள் - மேலுலகிலுள்ள திரண்ட குழை எனும் காதணிகள் பூண்ட தெய்வ மகளிர் எல்லார்க்கும் கிடைப்பதற்கரிய சிறந்த நிலையுடைய பதவியை நீ ஏற்றுக்கொள்; என்னா வணங்கினன் - என்று கூறி வீழ்ந்து வணங்கினான். உலகம் தாங்கும் மலை - மேருமலை. அது அச்சுப் போல நின்று உலகைத் தாங்குகிறது என்பது புராண மரபு. அணங்கு - அழகு என்பாருமுளர் அழகெனும் அவையும் ஓர் அழகு பெற்றதே என முன்னர்க் கூறப்பட்டுளது (513). தெய்வ மகளிர்க்கு உன் அழகால் வருத்தத்தை உண்டாக்குபவளே எனவும் கூறுவர். பின்னர் வரும் சுந்தரகாண்டக் காட்சிப் படலத்திலும் சீதையை வேண்டிய இராவணனை 'முடியின் மீது முகிழ்த்து உயர்கையினன், படியின் மேல் விழுந்தான் பழிபார்க்கலான்' எனக் காட்டுவார் கம்பர் (5182). ஒரு முறை அச்சுறுத்துவதும் மறுமுறை அடி வீழ்ந்து தாழ்வதும் இராவணனின் வெகுளியும் காமமும் மாறிமாறி அவனை அலைக்கழித்து நிற்கும் நிலையைக் காட்டும். கணம் - திரட்சி. 70 |