'இறைவா! இளையோய்' எனச் சீதை ஏங்கி அழைத்தல்

கலிவிருத்தம்

3389. தறைவாய் அவன் வந்து
     அடி தாழுதலும்,
கறை வாள் பட ஆவி
     கலங்கினள்போல்,
'இறைவா! இளையோய்!'
     என ஏங்கினளால்-
பொறைதான் உரு ஆனது ஓர்
     பொற்பு உடையாள்.

     அவன் வந்து தறைவாய் அடி தாழுதலும் - அந்த
இராவணன் சீதை முன் வந்து அவள் திருவடி நோக்கித் தரையில்
விழுந்து வணங்கவும்; கறைவாள் பட ஆவி கலங்கினள் போல் -
இரத்தக் கறை படிந்த வாள் தன் மீது பட உயிர் குலைந்து
துன்புற்றவள் போல; இறைவா இளையோய் என - என் தலைவனே!
அவர் தம்பியாம் இலக்குவனே! என வாய் விட்டுக்கதறி; பொறை
தான் உரு ஆனது 'ஓர் பொற்பு உடையாள்' ஏங்கினள் -
பொறுமையே ஓர் வடிவம் போன்ற தன்மையுடையவளாம் சீதை ஏக்க
முறுவாள்; ஆல் - அசை.

     தறை - தரை. பாயிரத்தில் 'மடப் பிள்ளைகள் தறையில் கீறிடின்
தச்சரும் காய்வரோ?' (9) என்பது போல் இங்கும் எதுகை நோக்கி
வல்லின றகரமாகத் திரிந்துள்ளது. இராவணன் நிலத்தின் மீது தான்
விழுந்தான். அச் செயல் வாளொன்று தன் உடல்மேல் பட்டது போல்
உயிர் கலங்கினாள் சீதை. இச் செயல் அவளது பண்பைக் காட்டும்.
'பொறை தான் உருவாய தொர் பொற்பு' என்பதும் 'இரும் பொறை
என்பது ஒன்றும்... களிநடம் புரியக் கண்டேன்' எனும் அனுமன்
கூற்றிலும் (6035) வெளிப்படும்.

     இப்பாடலும் பின்வரும் எட்டுப் பாடல்களும் அவலச் சுவையை
வெளிப்படுத்துவன.                                            71