இராவணன் பன்னசாலையோடு சீதையை எடுத்தல் 3390. | ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத் தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா; தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால், கீண்டான் நிலம்; யோசனை கீழொடு மேல். |
ஆண்டு ஆயிடை தீயவன் - அப்பொழுது அவ்விடத்தில் அத் தீயவனாம் இராவணன்; அயன் மேல் உரை சிந்தை செயா - பிரமன் முன்னரிட்ட சாபத்தை மனத்தில் எண்ணி; ஆயிழையைத் தீண்டான் - அணிகலன்கள் அணிந்த சீதையின் திருமேனியைத் தொடாதவனாகி; தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் - கல்தூண்கள் தாம் என்று கூறத்தக்க உயர்ந்த தோள்களின் வலிமையால்; நிலம் கீழொடு மேல் யோசனை கீண்டான் - சீதை இருந்த பூமியின் கீழேயும் பக்கங்களிலும் ஆக ஒரு யோசனை அளவு பெயர்த்தெடுத்தான். பிரமனிட்ட சாபம் பின்னர்ச் சடாயு உயிர் நீத்த படலத்திலும் 'தீண்ட அஞ்சுமால் ஆரியன் தேவியை அரக்கன் நல்மலர் பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல்சாபத்தால்' (3458) எனவும் கூறப் பெறும். இராவணனுக்கு வேதவதி, அரம்பை, நரி கூபரன், புஞ்சிகத்தலை ஆகியோராலும் சாபங்கள் உண்டு. நிலத்தொடு பெயர்த்தெடுத்த செய்தி கம்பரின் படைப்பு. இவ்வாறு படைத்தது மட்டுமின்றி நூலில் பல இடங்களில் இதனைக் கூறியுள்ளார். யோசனை என்பது ஒரு காத தூரம் எனவும் நாற்காததூரம் எனவும் கூறுவர். குபேரனின் அளகாபுரியில் அரம்பையை இராவணன் கற்பழித்த போது அவள் இட்ட சாபம் 'வலிய ஒரு பெண்ணைத் தீண்டின் அவள் கற்புக் கனலால் எரிவாய் என்பதாம் இவ்வாறே நளகூபனும் புஞ்சிகத்தலையும் சாபம் இட்டனர் என்பர். இவ்வாறு இராவணன் பெற்ற சாபம்பற்றிப் பல கதைகள் உள. இக் காண்டத்தின் முதற் படலத்தில் விராதன் பிராட்டியைப்பற்றித் தூக்கிச் செல்லும் செய்தி வருவது நினையத்தக்கது. வான்மீகஇராவணன் தீண்டிக் கவர்தலுக்கும் விராதன் தீண்டிக் கவர்தலுக்கும்வேற்றுமை உண்டு. இவன் காம வயத்தனாய்ப் பெண்மை சிதைக்கநினைப்பவன்; அவனோ விலங்கு நிலையிலனனாய் உணவுக்குஅலைபவன். விலங்கு நிலையினும் கொடியது காமக் கடுங்கனல்என்பது கருத்துப் போலும். இவ் ஒப்பீடு நெடிது நினைதற்கு உரியது. 72 |