சீதையின் அரற்றல் | 3392. | 'விடு தேர் என, வெங் கனல் வெந்து அழியும் கொடிபோல் புரள்வாள்; குலைவாள்; அயர்வாள்; துடியா எழுவாள்; துயரால் அழுவாள்; 'கடிதா, அறனே! இது கா' எனுமால். |
தேர் விடு என - (இராவணன் தேர்ப்பாகனைப் பார்த்து) விரைவாகத் தேரைச் செலுத்து என்று கூற; வெங்கனல் வெந்து அழியும் கொடி போல் - கொடிய தீயில் வீழ்ந்து வெந்து அழிகின்ற கொடி போன்று; புரள்வாள் குலைவாள் அயர்வாள் துடியா எழுவாள் துயரால் அழுவாள் - சீதை கீழே புரண்டு நிலை குலைந்து செயலறியாது சோர்ந்து மனம் துடித்து எழுந்து பின் வருந்தி அழுவாள்; அறனே கடிதா இதுகா எனும் - 'தருமமே! இத்துன்பத்திலிருந்து விரைவாகக் காப்பாற்று' என வேண்டுவாள். ஆல்- ஈற்றசை. தீயில் வீழ்ந்த கொடி எரிவது போலச் சீதை இராவணனின் தேர்மீது துன்புற்றாள். கொடி, சீதைக்கு உவமை; தீ, இராவணனின்செயலுக்கு உவமையாம். சீதை படும் பாட்டைப் பல வினைத்தொடர்கள் விளக்கும். மேலும் கடியா யறமே என்ற பாடத்திற்கு'ஒருவரும் கைவிடாத தருமமே எனவும் உரைப்பர். யாரும் துணையற்ற நிலையில் தருமமே காப்பாற்றும் என்றநம்பிக்கை இதனால் புலனாகும். 74 |