3393. | 'மலையே! மரனே! மயிலே! குயிலே! கலையே! பிணையே! களிறே! பிடியே! நிலையா உயிரேன் நிலை தேறினிர் போய், உலையா வலியாருழை நீர் உரையீர்! |
மலையே - மலைகளே!; மரனே - மரங்களே!; மயிலே - மயில்களே!; குயிலே - குயில்களே!; கலையே - ஆண் மான்களே!; பிணையே - பெண்மான்களே!; களிறே - ஆண்யானைகளே!; பிடியே- பெண் யானைகளே!; நிலையா உயிரேன் நிலை - நிலைபெறாத உயிருடன் துன்புறும் என் நிலையை; தேறினிர் போய் - அறிந்தவர்களாகச் சென்று; உலையா வலியாருழை - அழியாத வலிமையுடைய இராமலக்குவரிடம்; நீர் உரையீர் - நீங்கள் சொல்லுங்கள் என்றாள் சீதை. இராவணன்பால் சிக்கி உயிர் குலையும் தன் நிலையை அறிந்து, இராமலக்குவரிடம் எப்பொருளேனும் தெரிவித்துவிடாதா எனக் கையற்று அலறுவதை விவரிப்பது இப்பாடல். பண்டை இலக்கியங்களில் தலைவியைப் பிரிந்த தலைவனிடம் இவ்வாறு பல பொருள்களைத் தூது விடல் காணப்பெறும். ஞாயிறு திங்கள் அறிவே நாணே கடலே கானல் விலங்கே மரனே புலம் புறு பொழுதே புள்ளே நெஞ்சே அவையல பிறவும் நுவலிய நெறியாற் சொல்லுவ போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர் எனத் தொல் காப்பிய நெறி (தொல். பொருள். செய்யுள் 200 பேராசிரியம்) உணர்த்துவது ஒப்பிடற்குரியதாம். வலிய பகைவரையும் எளிதில் அழிப்பவர் இராமலக்குவர் ஆதலால் உலையா வலியார் என உரைத்தாள். 75 |