3394.'செஞ் சேவகனார் நிலை நீர் தெரிவீர்;
மஞ்சே! பொழிலே! வன தேவதைகாள்!
"அஞ்சேல்" என நல்குதிரேல், அடியேன்
உஞ்சால்,அது தான் இழிவோ?' உரையீர்!

    மஞ்சே - மேகங்களே!; பொழிலே - சோலைகளே!;
வனதேவதைகாள் - காட்டில் உள்ள தெய்வங்களே!;
செஞ்சேவகனார் நிலை - நேர்மையுள்ள நல்ல வீரனாம் இராமனின்
(என்னை இழந்ததால் அடையும்) துன்பநிலை; நீர் தெரிவீர் - நீங்கள்
அறிவீர்கள்; அஞ்சேல் என நல்குதிரேல் - பயப்படாதே என்று
எனக்கு ஆறுதல் அளிப்பீராயின்; அடியேன் உஞ்சால் அது தான்
இழிவோ உரையீர் -
அடியவளாகிய நான் (பிழைப்பேன் அவ்வாறு)
பிழைத்தால் அது உங்களுக்குக் குறையாகுமா? சொல்லுங்கள்.

     மலைமேலும் வானத்திலும் மஞ்சு இருக்கும். பொழிலும்
வானுயர்ந்து நிற்கும். வனதேவதைகள் காட்டில் நடப்பனவற்றை
அறிவார்கள். எனவே, அவையும் இராமன் என்னை இழந்து வருந்தும்
நிலையை அறிந்திருக்கக் கூடும். அதனைத் தன்னிடம் கூறச் சீதை
வேண்டுகிறாள். சேவகன் - வீரன்; இராமனைச் சேவகன்
என்றழைத்தல் 'சேவகன் சீறா முன்னம் சேதுவும் இயன்ற மாதோ'
என்ற அடியில் காணலாம் (4759). நிலை - இருக்கும் இடம்
எனலுமாம்.

     உஞ்சால் - போலி (உய்ந்தால்).                            76