3395. | 'நிருதாதியர் வேர் அற, நீல் முகில்போல் சர தாரைகள் வீசினிர், சார்கிலிரோ? வரதா! இளையோய்! மறு ஏதும் இலாப் பரதா! இளையோய்! பழி பூணுதிரோ! |
நிருதாதியர் வேர் அற - அரக்கர் முதலிய கொடியவர் அடியோடு அழிய; நீல்முகில் போல் சர தாரைகள் வீசினிர் சார்கிலிரோ - நீல மேகம் போல் அம்பு மழை பொழிந்து இங்கு வந்து சேரமாட்டீரா? வரதா - அடைக்கலமாக வந்தவர்க்கு அருளும் இராமனே!; இளையோய் - இராமனின் தம்பியாம் இலக்குவனே!; மறு ஏதும் இலாப் பரதா - குற்றம் ஒன்றும் இல்லாத பரதனே!; இளையோய் - பரதனை நீங்காத் தம்பியாம் சத்துருக்கனே!; பழி பூணுதிரோ - என்னை இந்த ஆபத்திலிருந்து காக்காமலிருந்து பழியை அடைவீர்களோ? நிருதாதியர் - அரக்கர் தலைவனாம் இராவணன் முதலானோர் எனவுமாம். இராமனை நீல முகிலுக்கு ஒப்பிட்டது நிறத்தாலும் அம்பு சொரியும் ஆற்றலாலும் என்க. 'வரதன்' என்ற வழக்கு பாலகாண்டத் திரு அவதாரப் படலத்தில் 'வரதனும் இளவலும் என மருவினரே' (307) என வந்துளது. கடுஞ் சொல்கூறி வனத்தில் இராமனைத் தேட இலக்குவனை விடுத்ததையும் மறந்து 'இளையோய்' என்கிறாள். கைகேயி வரத்தால் பெற்ற நாட்டை மீண்டும் இராமனுக்கே அளிக்கக் காட்டிற்கு வந்து கூற இராமன் மறுக்கவே அவன் பாதுகையைப் பெற்று நந்திக் கிராமத்திலிருந்த பரதனை 'மறுஏதும் இலாப் பரதா' என்கிறாள். பரதனை நீங்காத சத்துருக்கனையும் 'இளையோய்' என்றாள். இத்தகைய குற்றமற்ற நால்வரும் தனக்கேற்பட்ட தீங்கை நீக்க வராததால் பழி பூணுவார்களோ என அஞ்சுகிறாள் சீதை. 77 |