3397. | 'முந்தும் சுனைகாள்! முழை வாழ் அரிகாள்! இந்தந் நிலனோடும் எடுத்த கை நால்- ஐந்தும், தலை பத்தும், அலைந்து உலையச் சிந்தும்படி கண்டு, சிரித்திடுவீர். |
முந்தும் சுனைகாள் - என் முன்னே தோன்றும் மலை ஊற்றுக்களே!; முழை வாழ் அரிகாள் - மலைக் குகையில் வாழும் சிங்கங்களே!; இந்தந் நிலனோடும் - நானிருந்த இந்தத் தரையோடும்; எடுத்த கை நால் ஐந்தும் - பெயர்த்தெடுத்த இருபது கைகளையும்; தலைபத்தும் - பத்துத் தலைகளையும்; அலைந்துலையச் சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர் - (இராமன் அம்புகளால்) அலைவுற்றுச் சிதறி அழியச் சிந்திவிடுவதைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள்!. சுனை - மலையிலுள் நீர் நிலையுமாம். தனக்கேற்பட்ட அவலத்தில் எதிர்ப்படும் சுனைகளையும் முழையில் வாழும் சிங்கங்களையும் பார்த்து. இராவணன் அழிவதைக் கண்டு சிரியுங்கள் என்கிறாள் சீதை. தனக்குத் தீங்கிழைத்த இருபது கையும் பத்துத் தலையும் சிதற வேண்டும் என எண்ணுகிறாள் சீதை. இந்தந் நிலனோடும் என பிற அடிகளிற்கேற்ப எதுகை பெற ஒற்று மிகுந்து வந்துளது. 79 |