இராவணன் ஏளனமும் சீதையின் இடித்துரையும் அறுசீர் ஆசிரிய விருத்தம் 3398. | என்று, இன்ன பலவும் பன்னி, இரியலுற்று அரற்றுவாளை, 'பொன் துன்னும் புணர் மென் கொங்கைப் பொலன்குழாய்! போரில் என்னைக் கொன்று, உன்னை மீட்பர்கொல், அம் மானிடர்? கொள்க' என்னா, வன் திண்கை எறிந்து நக்கான்- வாழ்க்கைநாள் வறிது வீழ்ப்பான். |
என்று இன்ன பலவும் பன்னி - இவ்விதம் பல சொற்களைச் சொல்லி; இரியலுற்று அரற்று வாளை - நிலைகெட்டு வாய் விட்டுப் புலம்பி அழும் சீதையை, (நோக்கி); வாழ்க்கை நாள் வறிது வீழ்ப்பான் - தனது வாழ்நாளை வீணாக அழித்துக் கொள்பவனான இராவணன்; பொன் துன்னும் புணர்மென் கொங்கைப் பொலன்குழாய் - பொற்கலன்கள் அணிந்த நெருங்கிய மார்புகளை உடைய அழகிய குண்டலமணிந்த பெண்ணே!; அம்மானிடர் போரில் என்னைக் கொன்று உன்னை மீட்பர் கொல் - அந்த மனிதர்கள் சண்டையில் என்னைக் கொன்று உன்னை மீட்டு விடுவார்களோ?; கொள்க - முடிந்தால் மீட்டுக் கொள்ளட்டும்; என்னா வன்திண்கை எறிந்து நக்கான் - என்று கூறி வலிய திண்ணிய கைகளைப் புடைத்துச் சிரித்தான். பன்னுதல் - பல முறை கூறல். வாழ்க்கை நாள் வறிது வீழ்ப்பான் - செயற்கரிய தவம் செய்து மூன்றரைக் கோடி ஆண்டுகளை வாழ்நாளாகப் பெற்றும் தீய செயல் புரிந்து அவற்றை வீணாகப் போக்குபவன். அத்தகைய தீயோர் அழிவது உறுதி என்பது பெறப்பட்டது. பொன் துன்னும் - பொன்னிறம் பொருந்திய என்றுமாம். கைஎறிதல் - இகழ்ச்சியிலும் வெகுளியிலும் தோன்றும் மெய்ப்பாடு. 'அங்கதன் அதனைக் கேளா, அங்கையோடு அங்கை தாக்கித்துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான்' என வருவதை (7001) இத்துடன் ஒப்பிடலாம். கொல் - ஐயப்பொருளில் வந்த அசை. 80 |