3399. | வாக்கினால் அன்னான் சொல்ல, 'மாயையால் வஞ்சமான் ஒன்று ஆக்கினாய்; ஆக்கி, உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றைப் போக்கினாய்; புகுந்து கொண்டு போகின்றாய்; பொருது நின்னைக் காக்குமா காண்டி ஆயின், கடவல் உன்தேரை' என்றாள். |
அன்னான் வாக்கினால் சொல்ல - அந்த இராவணன் தன் வாயால் இந்தப் பழிமொழிகளைக் கூற; (சீதை அவனை நோக்கி); மாயையால் வஞ்ச மான் ஒன்று ஆக்கினாய் - மாயையினால் ஒரு பொய்ம்மானைக் கற்பித்தாய்; ஆக்கி உன்னை ஆர்உயிர் உண்ணும் கூற்றைப் போக்கினாய் - உனது அரிய உயிரை அழிக்கும் யமன் போன்ற இராமனை வேறு இடத்திற்குப் போகச் செய்தாய்; புகுந்து கொண்டு போகின்றாய் - இங்கு வந்து என்னைக் கவர்ந்து செல்கிறாய்; பொருது நின்னைக் காக்குமா காண்டி ஆயின் - போர் புரிந்து அவரிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியை அறிவாயானால்; உன்தேரை(க்) கடவல் என்றாள் - உன் தேரை மேற்கொண்டு செலுத்தாதே என்று சொன்னாள். வாக்கு - வாய், இடத்துத் தோன்றும் பொருள் இடத்திற்கு ஆயிற்று. பொய்ம்மானைக் காட்டி என் கணவனைப் போக்கினாய். என்னையும் அவரில்லாத போது கவர்ந்தாய். இத்தகைய இழிசெயல் செய்யாது தேரை நிறுத்தி நேரிடையாக அவருடன் போர் செய்வாயாக எனச் சீதை கூறினாள். உன்னை - உன்னுடைய என்ற பொருளில் வந்தது. இது உருபு மயக்கம். கடவல் - எதிர்மறை ஏவல் வினைமுற்று. 81 |