3400. | மீட்டும் ஒன்று உரைசெய்வாள்: 'நீ வீரனேல், "விரைவில் மற்று உன் கூட்டம் ஆம் அரக்கர் தம்மைக் கொன்று, உங்கை கொங்கை மூக்கும் வாட்டினார் வனத்தில் உள்ளார், மானிடர்" என்ற வார்த்தை கேட்டும், இம் மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ?' |
நீ வீரனேல் - நீ உண்மையான வீரன் என்றால்; உன் கூட்டம் ஆம் அரக்கர் தம்மை விரைவில் கொன்று - உன்னுடைய இனத்தாராம் அரக்கர்களை மிகக் குறுகிய காலத்தில் கொன்று; உங்கை கொங்கை மூக்கும் வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் - உன்னுடைய தங்கையாம் சூர்ப்பணகையின் முலையையும் மூக்கையும் வெட்டியவர் காட்டிலே உள்ளவராம் மனிதர்கள்; என்ற வார்த்தை கேட்டும் - என்று இச் சொற்களைக் கேட்டும்; இம்மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ - இந்த மாயையைச் செய்தது பயத்தின் மிகுதியால் அல்லவா என்று; மீட்டும் ஒன்று உரை செய்வாள் - (அந்த இராவணனைப் பார்த்து) மறுபடியும் ஒரு வார்த்தை சொல்வாள். மற்று - அசை. விரைவில் கொல்லல் - கரதூடணரையும் எண்ணற்ற போர் வீரரையும் ஒரு முகூர்த்த நேரத்தில் இராமன் கொன்றதைக் குறிப்பிட்டதாம். சூர்ப்பணகையின் உறுப்புகளை அறுத்தது இராவணனுக்கு அவமானம் தரும் செயலாகும். இவ்விரு செயல்களையும் செய்த மானிடரை நேரில் மோதி எதிர்த்துப் போர் செய்யாமல் வஞ்சனையாக என்னைக் கவர்ந்தது அச்சத்தின் விளைவு எனச் சீதை இராவணனின் வீரத்தின் குறையைச் சுட்டினாள். 'வீரனேல்' என்ற சொல் இராவணன் வீரன் அல்லன் என்ற கருத்தினைக் குறித்தது. வீரனுக்கு வஞ்சகச் செயல் ஒவ்வாது. பின்னரும் இராவணனை நோக்கிச் சீதை 'உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ? (5202) எனச் சுந்தர காண்டத்தில் கூறுவதும் நோக்கற்குரியது. மற்று - அசைச்சொல். 82 |