அரக்கன் மறுமொழியும் சீதையின் எதிர்மொழியும்

3401.மொழிதரும் அளவில், 'நங்கை! கேள் இது;
     முரண் இல் யாக்கை
இழிதரு மனிதரோடே யான் செரு
     ஏற்பன் என்றால்,
விழி தரு நெற்றியான்தன் வெள்ளி
     வெற்பு எடுத்த தோட்குப்
பழி தரும்; அதனின் சாலப் பயன் தரும்,
     வஞ்சம்' என்றான்.

    மொழிதரும் அளவில் - (இவ்வாறு சீதை) சொன்ன அளவில்;
(இராவணன் அவளை நோக்கி); நங்கை - பெண்ணே!; இது கேள் -
இதனைக் கேட்பாயாக; முரண் இல் யாக்கை இழிதரு மனிதரோடே
யான் செரு ஏற்பன் என்றால் -
வலியற்ற உடலை உடைய இழிவான
மனிதர்களுடன் நான் போர் செய்ய முனைந்தால்; விழிதரு நெற்றி
யான் தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு -
நெற்றியில்
கண்ணுடைய சிவபெருமானின் கயிலை மலையை எடுத்த
தோள்களுக்கு; பழி தரும் - பழிப்பை உண்டாக்கும்; அதனின்
வஞ்சம் சாலப்பயன் தரும் என்றான் -
அதைக் காட்டிலும் இந்த
வஞ்சனைச் செயல் மிகுந்த பயனைக் கொடுக்கும் எனக் கூறினான்.

     வலிமையுள்ள இராவணன் வலிமையற்ற மனிதர்களோடு போரிடுவது
பழியைத்தரும். அதுமட்டுமன்று; சிவனின் கயிலை மலையை எடுத்த
தோள்களின் பெருமை குலையும். எனவே, வஞ்சித்துச் சீதையைக்
கவர்ந்தது நியாயமாகும் எனக் கூறுகிறான். வஞ்சனையானது பழியை
விட ஏற்கத்தக்கது என நியாயம் போல் பேசுகிறான் இராவணன்.
இவ்வஞ்சனையால் தனக்குப் பழியில்லை. ஆனால் அந்த
மானுடர்க்குத் தீங்கு விளைவிக்கும் என வாதிட்டான் அவன்.        83