3402. | பாவையும் அதனைக் கேளா, 'தம் குலப் பகைஞர்தம்பால் போவது குற்றம்! வாளின் பொருவது நாணம் போலாம்! ஆவது, கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம்! ஏவம் என், பழிதான் என்னே, இரக்கம் இல் அரக்கர்க்கு? என்றாள். |
பாவையும் அதனைக்கேளா - சித்திரப் பதுமை போன்ற அழகுள்ள சீதையும் இராவணனின் அம் மொழியைக் கேட்டு; (அவனைப் பார்த்து); தம் குலப் பகைஞர் தம்பால் போவது குற்றம் - தமது குலத்தின் பகைவரிடத்துப் போரிடச் செல்வது குற்றமாம்; வாளின் பொருவது நாணம் போலாம் - அவர்களுடன் வாளேந்திப் போரிடுவது நாணம் தருவது ஆகும் போலும்; கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆவது ஆம் - கற்புடைய மகளிரை வஞ்சகமாய்க் கவரும் வலிமையே செய்யத்தக்கது ஆகும் போலும்; இரக்கம் இல் அரக்கர்க்கு - கருணை இல்லாத இராக்கதர்க்கு; ஏவம் என் பழிதான் என்னே என்றாள் - குற்றம் என்பது என்ன நிந்தனை என்பது எதுவோ எனக் கேட்டாள். பாவை - கண்ணிற் பாவைக்குமாம். இது உவமை ஆகுபெயர். வாள் என்பது படைக்கலன்களுக்குப் பொதுப்பெயராய் வந்தது. ஏவம் - குற்றம். எவ்வம் என்பதன் விகாரம் குற்றத்திற்கும் பழிக்கும் இரக்கமற்ற அரக்கர் காட்டும் மதிப்பு மற்றவர்களை விட வேறு வேறு மதிப்புடையது போலும் எனச் சீதை எள்ளிக் கூறினாள். அரக்கர் வஞ்சித்தற்கே உரியவர் என 'வஞ்சிக்கும் ஆற்றலே ஆம்' என்ற தொடர்க்குப் பொருள் கூறலாம். 84 |