சானகியைக் கவர்ந்து செல்லும் இராவணனைச் சடாயு எதிர்த்தல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 3403. | என்னும் அவ் வேலையின்கண், 'எங்கு அடா போவது?' என்னா, 'நில் நில்' என்று, இடித்த சொல்லன், நெருப்பு இடைப் பரப்பும்கண்ணன்; மின் என விளங்கும் வீரத் துண்டத்தன்; மேரு என்னும் பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான்; |
என்னும் அவ்வேலையின்கண் - என்று (சீதை) சொல்லிய அந்தச் சமயத்தில்; எங்கு அடா போவது - எங்கே அடா (என்னைத் தப்பி நீ) போவது; என்னா - என்று; நில்நில் என்று இடித்த சொல்லன் - நில் நில் என்று இடியோசை போல் ஒலிக்கும் உரத்த சொற்களை உடையவனும்; நெருப்பு இடைபரப்பும் கண்ணன் - சினத் தீயைத் தம்மிடம் பரவச் செய்த கண்களை உடையவனும்; மின் என விளங்கும் வீரத்துண்டத்தன் - மின்னலைப் போல் (ஒளி) விளங்கும் வீரவலி பொருந்திய அலகை உடையவனும்; மேரு என்னும் பொன் நெடுங்குன்றம் - மேரு என்று கூறுகிற பொன்னால் ஆகிய பெரிய குன்று; வானில் வருவதே பொருவும் மெய்யான் - வானத்தில் பறந்து வருவது போன்ற (பேருடம்பினை) உடையவனும் - ஆகிய ("எருவையின் மன்னன்" என்ற 6ஆம் பாடலில் பொருள் முடிக்க). இப்பாடலில் சடாயுவின் கண், அலகு, மேருமலை போன்ற உடம்பு ஆகியவை கூறப்பட்டன. என்னும் அவ்வேலையின் கண் என்பது, முன் படல இறுதிப் பாடற் கருத்தை உட்கொண்டு கூறியது. இப்பாடல் முதல் வரும் ஆறு பாடல்கள் பல பாட்டு ஒருவினை கொள்ளும் குளகம். வேலை - வேளை, சொல்லன், கண்ணன், துண்டத்தன், மெய்யான் என்னும் குறிப்பு வினைகள் "எருவையின் மன்னன வந்தனன்" என்னும் ஆறாம்செய்யுளில் முடியும். வீரத்துண்டத்தன் - வலிய அலகினை உடையவன்என்க. 1 |